பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அறிவியல் திருவள்ளுவம்

வாழ்வியல் பூட்டகங்களையும் வெளிப்படுத்துவனவாகும். இதனை அடியொற்றிய இச்சிறு நூலில் எடுத்துக்கொண்ட கருத்திற்கு ஏற்பத் தமிழ் சொற்கள் மூல அமைப்புடனும், பொருளுடனும் உரிய இடங்களில் சான்றுகளாகக் காட்டப்படுகின்றன.

இனி அறிவியற் கவிஞரைக் காண்போம்:

அறிவியல்

‘அறிவு, இயல்’ என்னும் இரு சொற்களில் இயல்: என்பதற்கு முதற்பொருள்கள் இலக்கியம், இலக்கணம் என்பன. முத்தமிழில் ஒன்றாகிய ‘இயல் தமிழ்’ என்பது இலக்கியத்தையும் இலக்கணத்தையும் குறிப்பது. தொல் காப்பியம் மூன்று அதிகாரங்களில் 27 உட்பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் 22 உட்பிரிவுகள் பிறப்பு இயல், மரபு இயல் என இயல்' என்று அமைந்தவை. இங் கெல்லாம் ‘இயல்’ என்பது இலக்கணத்தைக் குறிக்கும்; இத்துடன் துறை என்னும் உட்பிரிவையும் குறிக்கும். திருக்குறளிலும் மூன்று பாடல்களில் 13 இயல்கள் உள்ளன. இவையும் இலக்கணம் என்றும், உட்பிரிவாம் துறை: என்றும் பொருள்படும்.

நீர்நிலையாம் குளத்திற்குள் இறங்குவதற்குப் பல துறைகள் இருக்கும். இது போன்று ஒரு தொகுப்புக் கருத்திற்கும் பல உட்பிரிவுகள் அமையும். இவ்வுட் பிரிவே துறை எனப்படும்.

‘அறிவியல்’ என்பது ஒரு துறை. வாழ்வியல் இயக்கத்திற்குத் துணை நிற்பது அறிவியல். இக்காலத்தில் உவகை அளாவி, வானத்தை அளாவி வளர்ந்துள்ளது. அனைத்திலும் மேம்பட்டு நிமிர்ந்து நிற்கிறது.