பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோ. வை. இளஞ்சேரன்

51

எனவே, ஐந்தும் ஒன்றன் தொடர்புடைய ஒன்றாகச் சங்கிலித் தொடராய் அமைக்கப்பட்டுள்ளன.

நோய் இல்லாமை - பிணியின்மை செல்வத்தின் பயன்பாட்டிற்குத் தடை இல்லாது உதவுவது. எத்துணை செல்வமிருப்பினும் நோய் பிணித்துக் கொண்டிருந்தால் அச்செல்வம் உரிய மகிழ்ச்சியைத் தராது. எனவே, பிணியின்மையை அடுத்துச் செல்வம் வைக்கப்பெற்றது. நாட்டுச் செல்வம் என்பது சிறப்பாக நிலத்து விளைச்சலில்தான் உள்ளமையால் செல்வத்தை அடுத்து விளைவு அமைக்கப் பெற்றது. பல்வகை விளைச்சலால் மக்களின் வாழ்க்கை இன்பம் பெறும். பெறப்பட்ட இன்பம் பறிபோகாமல் நிலைக்கப் பாதுகாப்பு வேண்டும். இவ்வாறாக ஐந்தும் ஒன்றையொன்று தொடரும் சங்கிலித் தொடராக அமைக்கப்பட்டுள்ளன. பிணியின்மை முதலில் மாந்தரின் வளமான வாழ்விற்கு உடல் நலந்தான் அடிப்படை என்பதைக் காட்டுவதாகும்.

இப்பிணியின்மையில் அமைந்துள்ள அறிவியல் திறத்தைக் காணுதல் இக்கால அளவில் ஒரு முதன்மை பெறுவதாகும்.


அ. பிணியின்மை

நோய் - பிணி

அறிவியல் துறைகள் 1. நோய்இயல், 2. உணவியல் 3. மருத்துவ இயல், 4. உடலிய உளவியல் - எனும் நான்கு இயல்கள் - இத்தலைப்பில் குறளிலிருந்து புலனாக்கப்படுகின்றன.