பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

75

தற்கும் உரியவன். இவற்றிற்கு எதிர்வருபவற்றை முன்னரே எண்ணிப்பார்த்து "எதிரதாக் காக்கும் அறி"வைப் பெறவேண்டும்.

நெஞ்சக நோய். மிகு கொழுப்பினால் வரும். அதனால் மாறுபாடில்லாத உணவு கொள்ளவேண்டும். மாறு பாடுள்ளதை மறுத்து அளவறிந்து உண்ணவேண்டும். வேண்டாத விரைவும் படபடப்பும் கொண்டு உள்ளத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது. இவையாவும் "எதிரதாக் கொள்ளும் அறி”வின் விளைவுகள். இவ்வறிவு “அதிர வருவதோர் நோய்"க்குத் தடை, வராமலே காக்கும் உளவியல் அறிவு இது.

எனவே,

"எதிர தாக் காக்கும் அறிவினார்க்கு” மாரடைப்பாம் அதிரவருவதோர் நோய் வராது; இக்கருத்தையும் இக்குறள் பொதிய வைத்துள்ளது. இவ்வகையிலும் திருவள்ளுவர் மருத்துவ அறிவியலின் முன்னோடியாகிறார்.

பிணியின்மை விளக்கி விரிவாக எழுதப்பட்டுள்ளது. காரணம், 'மருந்து' என்னும் அதிகாரத்திலுள்ள பத்துக் குறட்பாக்களும் அறிவியல் பாங்கு கொண்டவையாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சொல்லும் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. இதுபோன்று திருவள்ளுவத்தில் பரவலாக அறிவியல் கருத்துக்கள் பொதிந்திருப்பினும் மருந்து போல முழு அதிகாரம் பெறவில்லை மாந்தர் வாழ்வில் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.'