பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

89


பருப்பொருளாயுள்ள அசித்தில் இறைவன் அந்தர்யாமியாய்யுள்ள நிலையே காரிய நிலையாகும். அதனால் இறைவன் முதற்காரணமாயுள்ள நிலையிலும் காரியமாயுள்ள நிலையிலும் சிறிதும் வேறுபடுவதில்லை.

“சாணிலும் உளன்ஓர் தன்மை
        அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன்மா மேருக்
        குன்றினும் உளன்இந் நின்ற
தூணினும் உளன்நீ சொன்ன
        சொல்லினும் உளன்;இத் தன்மை காணுதி.”24[1]

என்று இரணியனுக்குப் பிரகலாதன் கூறுவதாய் அமைந்த பாடலில் ‘எங்கும் உளன் கண்ணன்’ என்ற உண்மையைக் காணலாம். இதனால், ஈசுவரன் விகாரமற்றவன் - நிர்விகாரன் - என்று சொல்லுவதில் தவறில்லை. இக்கருத்தை ஆழ்வார் பாசுரத்தில் ‘வித்தாய் முதலில் சிதையாமே’ (திருவாய் 1-5 : 2) என்ற தொடர் அழகுடன் விளக்குவதைக் கண்டு தெளியலாம். உலகத்துப் பொருள்கள் போலன்றி இறைவன் தன்னிலையில் சிறிதும் சிதைவின்றி இருந்துகொண்டே எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் உள்ளான் (முதற்காரணமாகின்றான்) என்பது கருத்தாகும். இங்ஙனம் இருத்தல் இவனுடைய ஆச்சரிய சக்தியாகும். இதனையே திவ்விய கவி பிள்ளைப்பெருமாள் அய்யங்காரும்,

“சின்னூல் பலபலவாயால் இழைத்துச்
        சிலம்பி பின்னும்
அந்நூல் அருந்தி விடுவதுபோல்
        அரங்கர் அண்டம்
பன்னூறு கூடி படைத்துஅவை
        யாவும் பழம்படியே
மன்னூழி தன்னில் விழுங்குவர்
        போதமனம் மகிழ்த்தே.”25[2]

என்ற மிக அழகான உவமை கலந்த பாடலால் விளக்குவர். ஒரு சிலந்திப்பூச்சி தன்னிடத்திலிருந்து நூலை உண்டாக்கித் தான் அதனை விழுங்குகின்றது. நூல் உண்டாதற்கு முதற்காரணமா


  1. 24. கம்பரா - யுத்த இரணியன் வதை - 124
  2. 25. திருவரங்க மாலை - 18