பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

93



2 (அ) வைதிக சமயத் தத்துவங்கள்

இந்து சமயத் தத்துவங்களுக்கு அருமறைகளே முதற்காரணமானவை என்று பகர்வார்கள். வேதங்களின் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன. ஆனால், அருமறைகளினின்றும் தெள்ளி எடுத்த உபநிடதங்கள் காப்பாற்றப்பெற்றுள்ளன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிடதங்களின் போக்கு எத்தகையது என்று விளக்குவது. பாதராயணரால் இயற்றப்பெற்ற பிரம்மசூத்திரம். இதனை வேதாந்த சூத்திரம் என்று மற்றொரு திருநாமத்தாலும் வழங்குவதுண்டு. உபநிடதங்களில் அடங்கியுள்ள கருத்துகளையெல்லாம் மேலும் தெளிவு பெற விளக்குவது, பகவத்கீதை. இது பாரதப் போர்க்களத்தில் பார்த்தனுக்குப் பரந்தாமனால் புகட்டப்பெற்றது. மாபாரத வீடும பர்வத்தில் 25வது இயல்முதல் 42ஆவது இயல்வரையில் இந்த நூலைக் காணலாம்.

உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத் கீதை ஆகிய இந்த மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாய் அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை இல்லை; முரண்பாடுகளும் இல்லை. அருமறைகளைச் (வேதங்களைச்) சார்ந்த வைதிகத் தத்துவங்கள் சாங்கியம், வைசேடிகம், நியாயம், யோகம், மீமாம்சை, வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவையாகும்.

(1) சாங்கியம் : இந்து சமய தத்துவங்களுள் - தர்சனங்களுள் - மிகவும் தொன்மையானது, சாங்கியம். இந்தத் தத்துவத்தை முறைப்படுத்தி முதலில் வெளியிட்டவர், கபிலர். (கி.மு.7, 8 நூற்றாண்டு). முதலில் தோன்றியதால் இதற்கு முதன்மைச் சிறப்பு எப்பொழுதும் உண்டு. சாங்கியம் என்றால் பூரண அறிவு என்பது ஒரு பொருள். ‘சாங்கியா’ என்ற தாதுவிலிருந்து ‘சாங்கியம்’ என்ற சொல் தோன்றியது. இத்தாதுவிற்குப் பகுத்தறிதல், எண்ணுதல் (Reasoning, Number) எனப் பல பொருள் உண்டு. உலகத் தோற்றத்தில் காணப்பெறும் கூறுகளைச் சிந்தித்துத் தெளிந்து பல வகை மூலப்பொருள்களாய் அடைவு செய்து, கண்டறிந்த தத்துவங்கள் 25 என்று எண்ணுதலால்