பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

95


கொடுப்பவன் அல்லன்: இறைவனும் ஒரு புருடனே. தொடக்க காலம் முதல் பிரகிருதியோடு கட்டுண்டு கிடக்காமல் தனித்திருக்கும் ஒரு புருடன். யோக தரிசனத்தை நிறுவியவர், பதஞ்சலி. இவருக்கு முன்பே இதன் தத்துவங்கள் வளர்ந்திருப்பினும் இவர் எழுதிய யோக சூத்திரம் என்ற நூல்தான் இவற்றிற்கு அடிப்படை.

சித்தத்துாய்மை பெற்று, ‘யான்’, ‘எனது’ என்ற அகப்பற்று புறப்பற்றுகளை அறவே நீக்குதலே யோக தரிசனம். பிரகிருதியின் பிடியிலிருந்து விடுபட்டு அறிவுமயமான தனது உண்மை நிலையை அடைவதே புருடனின் (ஆன்மாவின்) குறிக்கோள். பரம்பொருளாகிய பிரம்மத்துடன் சேர்வது என்னும் வைதிகச் சமயங்களின் குறிக்கோளை யோக சமயத்தினர் ஏற்பதில்லை. பிரகிருதியிலிருந்து தனியாய்ப் பிரிந்து அறிவு மயமாய்த் தனித்திருப்பதுதான் ஆன்மாவின் குறிக்கோள் என்பது யோக சமயத்தினர் தரும் விளக்கமாகும். இதற்கு இவர்கள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் (புலன்களைக் கட்டுப்படுத்தல்), தாரணை (மனத்தை ஒருநிலைப்படுத்தல்), தியானம் (தத்துவ உண்மைகளை ஊன்றி எண்ணல்) சமாதி என்ற எட்டுப்படிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும் என்று கூறுவர். இவ்விதிகளை நடைமுறையில் கடைப்பிடித்தால்தான் முக்தி அடைய முடியும். அஃதாவது ஆன்மா, ஆசை, துன்பம், கேடு முதலியன நீங்கப்பெற்று பிரகிருதியிலிருந்து விடுபட்டுத் தனது ஆநந்த ஞான நிலையை எய்தும். சீவன் முக்தி என்பது இந்த வையத்தில் இப்பிறவியில் இறப்பதற்கு முன்பாகவே முக்தி அடைவது.

(3) வைசேடிகம் : இதுவும் வேதத்தைச் சார்ந்த தரிசனம். வேதக்கருத்துகளை ஒரு பரிமாணமாய் ஏற்றாலும், தனக்கென ஒரு சிந்தனையுடன் தத்துவங்களை அமைத்துக்கொண்டது, வைசேடிகம். இத்தரிசனத்தின் அடிப்படை நூல், கணாத முனிவரால் எழுதப்பெற்ற வைசேடிக சூத்திரம். கணாதர் என்ற சொல்லின் பொருள் அறியத்தக்கது. கணம் - அணு; அதி - உண்ணுதல்; ஆதலின், அணு விழுங்கியார் (Atom Swallower) என்று ‘கணாதர்’ என்ற சொல்லுக்குப் பொருள் உரைப்பர். மிக நுண்ணியதும், பிரிக்கவொண்ணாததுமான அணுவினை உள்பொருளாய் (Reality) மதித்ததால் இப்பெயர் இவருக்குப்