பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

103



நம் நாட்டைப் பொறுத்தவரையில் தத்துவமும் சமயமும் வேறு வேறாய் இருப்பினும் இரண்டிற்கும் அடிப்படை, வேதங்களும் ஆகமங்களும் ஆகும். தத்துவஞானம் என்பது அறிவு நிலையில் இந்த அகிலத்தின் மூலத்தையும், அது வளர்ந்த வழியினையும், மற்ற இயல்புகளையும் ஆராய்வது. சமயம் மக்களின் வாழ்விறகு ஒரு நோக்கத்தையும், அதனை அடையும் வழியையும் வகுப்பது. அதற்காக முழுமுதற்கடவுளை அடிப்படையாய் முன்வைத்து வாழ்க்கை முறையை நெறிப்படுத்ததுவது சமயமாகும். தத்துவ ஞானத்தில் அனுமானிக்கப்பெற்ற முழுமுதற்பொருளுக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட இறைவனுக்கும் உள்ள தொடர்பை ஆராய முற்பட்டனர் பலர். இவர்களில் முக்கியமானவர்களை மேலே கண்டோம்.

2(அ) ௳. சைவ சித்தாந்தம் : சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபாய்க் கொள்ளப்பெறும் பொருள்கள் பதி, பசு, பாசம் என்ற மூன்றாகும். பதி - இறைவன், பசு - ஆன்மா, பாசம் - உலகம் (தளை). இம்மூன்றும் நிலையான பொருள்கள். இவை அநாதியாய் இருப்பவை.


“பதிபசு பாசம் எனப்பகர் மூன்றின்

பதியினைப் போற்பக பாசம் அனாதி.”[1]

என்று தெளிவுபடுத்துவர், திருமூலர். இவை நித்தியமாய் இருப்பினும் ஒன்றற்கொன்று சமமாய் இருப்பது அன்று.

இத்தத்துவப்படி இறைவனுடைய எட்டுக் குணங்கனைக் குறுக்கி சத் (உண்மை), சித் (அறிவு), ஆனந்தம் என்று கூறுவர். இறைவன் உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளில் வழிபடப்படுபவன். உருவத்திற்குத் தில்லைச் சிற்றம்பலவனும், அருவத்திற்குச் சிதம்பர இரகசியமும், அருவுருவத்திற் சிவலிங்கமும் எடுத்துக்காட்டுகள். பதி (இறைவன்) தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் காணப்படும் இயல்புகள் பதியின் சொரூப இலக்கணமாகும். பதி, உலகை நோக்கியிருக்கும் போதுள்ள இயல்புகள் தடத்த இலக்கணமாகும். சொரூப நிலையில் இறைவன் ‘பரமசிவன்’ என வழங்கப்பெறுகின்றான். தாயுமான அடிகளின் பரமசிவ வணக்க முதற்பாடலில் சிவத்தின் ‘சொரூப இயல்பு’ நுவலப்பெற்றிருத்தலைக் காணலாம்.


  1. 37.திருமந் - முதல் தந். உபதேசம் - 3