பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


புலன்களால் உணர முடியாதவையாதலாலும் அனுமானிக்கமட்டிலும் கூடியவையாதலாலும் உலகாயதர் அவற்றை நம்புவதில்லை. இவர்கள் உலகப்பொருள்களைமட்டிலும் விளக்கியுள்ளனர். இவர்களது விளக்கங்கள் இக்கால அறிவியலறிஞர்கள் மெய்ப்பித்த விளக்கங்களோடு ஒத்திருப்பவை. உலகப் பொருள்களின் உற்பத்தி, அவற்றின் அழிவு, உயிர்பற்றிய கருத்து இவற்றை பன்னெடுங்காலத்துக்கு முன்னரே விளக்கியுள்ளனர்.

உலகப்பொருள்கள் யாவும் நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற நான்கு அடிப்படை பொருள்களாலானவை என்றும், அவை அழியும் போது மீண்டும் அந்த நான்கு பூதங்களாய் மாறிவிடுகின்றன என்றும் இவர்கள் விளக்குவர். ஐந்தாவது பூதமாகிய ஆகாயம் நேரடியாய் உணர முடியாதாதலாலும் அனுமானத்தால் மட்டிலும் உணரக்கூடியதாதலாலும் இதன் இருப்பை இவர் ஒப்புக்கொள்வதில்லை. இன்றும் அறிவியலால் விளக்கப்பெறும் நூற்றுக்கு மேற்பட்ட தாதுப்பொருள்கள் யாவும் இந்தத் நான்கு பூதப் பொருள்களின் வெவ்வேறு விகிதச் சேர்க்கையால் ஆனவை என்றும் அவை இயல்பாகவே அவ்வாறு சேரக்கூடியவை என்றும் விளக்கமும் தந்துள்ளனர். இத்தகைய சில வகை பூதப்பொருள்கள் ஒன்று சேருங்கால் இயல்பாய் ஏற்படும் கூடுதல் குணந்தான் உயிர் என்பது இவர்தம் கருத்தாகும். கர்மம் (புண்ணியம், பாவம்) மறுபிறவி என்பவற்றையெல்லாம் இவர்கள் நம்புவதில்லை. ‘வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்’ என்ற கொள்கையை இவர்கள் ஏற்பதில்லை. உலகில் உயிருடன் வாழும்போது கிடைத்தவற்றை அநுபவிப்பதே நன்று என்பது இவர்தம் கொள்கை. மேலைநாட்டார் கூறும் சிற்றின்ப கோட்பாட்டாளர் (Epicureans) களோடு ஒப்ப வைத்து எண்ணக்கூடியவர்கள் இவர்கள்.

இன்றைய அறிவியலறிஞர்கள், உலகிலுள்ள அடிப்படைப் பொருள்களை 92 வகையான தனிமங்களில் அடக்கிக் காட்டியுள்ளனர். இவை தம்மொடு தாமும் பிறிதுமாய்க் கலந்து அணுத்திரளைகள் (Molecules) ஆகின்றன. இத்தகைய கலவைகள் உலகில் ஏழு இலட்சத்திற்கு மேல் உள்ளனவாம். இத்தனை வகையாகப் பல்கிப் பெருகியுள்ள உலகம் 92 தனிமங்களில் (Elements) அடங்கிவிடுவது வியப்பினும் வியப்பே.