பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


நியதிக்காக காத்திரு. ஒருவன் நுகரும் இன்பமும் துன்பமும் நியதியால் கிடைப்பன. எல்லா உயிர்களும் மாறிமாறிப் பிறத்தலால் தூய்மை பெறுகின்றன. ஆதலின், வருவது குறித்து ஆவலுற வேண்டாம் அது தானே வரும்” என்பதே ஆசீவகரின் கொள்கையாகும்.

(V) மண்டல மோட்சம் : ஆசீவகக் கொள்கைக்குத் தீங்கு நேரின் அவ்வப்பொழுது அதனைக் காக்கவும் பரப்பவும் தீர்த்தங்கரர் அவதாரம் எடுப்பார் என்பது ஆசீவகரின் நம்பிக்கை. அவதாரக் கொள்கை என்பது இந்தியச் சமயங்கள் பலவற்றிலும் காணப்பெறும் ஒரு பொதுக் கூறு ஆகும். இத்தீர்த்தங்காரை மண்டலர் என்று குறிப்பிடுவர். இங்ஙனம் மீண்டும் தீர்த்தங்கரர் தோன்றுவதற்குக்கூட நியதியே காரணமாகும்.

உலகில் இவ்வளவு ஆன்மாக்கள் இருத்தல் வேண்டும் என்னும் வரம்பினைக் காக்கவும், விடுபட்ட உயிர்களை மீண்டும் பிறக்கவும் நியதிதான் வகை செய்யும். நியதியின்படி திரும்பாத விடுதலை பெற்ற சில ஆன்மாக்களும் உண்டு. அவர்கள் ‘செம்போதகர்’ என்ற திருநாமத்தால் வழங்கப்பெறுவர். அவர்கள் அண்டத்தின் அப்புறத்தில் இருப்பர் என்றும், அவர்கள் சமண தீர்த்தங்கரருக்குச் சமானமானவர் என்றும் சிவஞான சித்தியார் பரபக்கம் பகர்கின்றது (பா.175, 164). மகாயான பௌத்தத்தில் போதிசத்துவரும் வைணவத்தில் அவதாரபுருடரும் ஆசீவகத்தில் மண்டல புருடரும் ஒரு வகையில் ஒரு நிலையினர் என்று கருதலாம். ஆசீவக நிர்வாணப்பேறுகூட நியதிக்குக் கட்டுப்பட்டதேயன்றி மற்றைய சமயங்கள் மொழிவன போலக் கட்டற்ற நிலையன்று. மண்டல மோட்சக் குறிப்பு மணிமேகலை கட்டும் ஆசீவகத்திலும் உண்டு (27:158).

(3) சமணம் : அருமறைக் கூறுகளை ஒப்புக்கொள்ளாத தத்துவங்கள் கொண்டது, சமணம் : இதனை நிறுவியவர், மகாவீரர். சங்க காலத்திலிருந்தே தமிழகத்தில் ‘சமணம்’ பரவி இருந்தது. வைதிக ஆகம நெறியினரைப் போலச் சமணர்கள் பரம்பொருள் வழிபாடு கொண்டிலர். பிறப்பினின்றும் விடுபட்ட ஆன்மாவை ‘அருகன்’ எனக் கொண்டு அவனையே முழுமுதற்பொருளாய்ப் பணிந்தேத்தும் மரபு சமணர்க்குரியது. இவர்கள் வழிபடும் திருக்கோயில் நிக்கந்தக் கோட்டம், ஶ்ரீகோயில்