பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

127



சீலங்கள் : சீலம் பஞ்சசீலம் என்றும், அஷ்டசீலம் என்றும், தசசீலம் என்றும் மூவகைப்படும். கொல்லாமை, திருடாமை, வியபிசரியாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை என்னும் இவை பஞ்சசீலம் ஆகும். இஃது இல்லறத்தார் எல்லோர்க்கும் உரியது. இவற்றினோடு இரவில் தூய்மையற்ற உணவை உண்ணாமை. சந்தனம் முதலிய நறுமணமுள்ள பொருள்களை நுகராமை, பஞ்சணை போன்றவற்றை பயன்படுத்தாமை என்ற மூன்று சேர்க்கப்பட்டு அஷ்டசீலம் என்று பெயர் பெறும். இஃது இல்லறத்தாரின் சற்று உயர்நிலையடைந்தவர்க்கு உரிய ஒழுக்கமாகும். இவ்வெட்டனோடு நாட்டியம், இசை முதலிய விரும்பாமை, பொன் வெள்ளிகளைத் தொடாமை என்ற இரண்டும் சேர்த்து தசசீலமாகும். இது துறவறத்தாருக்குரிய ஒழுக்கமாகும்.

மாற்றமுடைமை : இந்த உலகில் மாற்றமடையாத நிலையான பொருள்கள் என்பவை இல்லை. எல்லாப் பொருள்களும் எப்போதும் மாற்றம் அடைந்தவண்ணமே உள்ளன. மாற்றமே உண்மை; மாற்றமே நித்தியம் என்பது இச்சமயத்தின் அதிராக் கொள்கை. அம்மாற்றங்கள் சிறுசிறு அளவில் நேரிடுவதால் அம்மாற்றங்களை நம்மால் உணர முடிவதில்லை.

நம் முயற்சியால் நாம் நிர்வாணத்தை அடையலாம் என்று ஹீனயானிகளும், உலகில் மற்ற உயிர்களின் துன்பத்தை நீக்குவதே நிர்வாணத்தை அடையும் வழி என்று மகாயானிகளும் கூறுவர். நிர்வாணம் என்பது ஒன்றும் இல்லாத - சலன மற்ற - ஓர் அமைதியான சூனியம் என்பது ஹீனயானிகளின் விளக்கம். இந்த அகிலம் முழுவதற்கும் மூல நிலைக்களமான ஓர் உயர்ந்த நிலையே நிர்வாணம் என்பது மகாயானிகளின் கருத்து.

3. அறிவியல், சமயம், தத்துவம் – மீள் பார்வை

உலகச் சிந்தனையாளர் அனைவரும் கடவுள், ஆன்மா, உலகம் என்ற மூன்று பொருள்கள்பற்றித் தம் சிந்தனையைச் செலுத்தியுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டேன். இவை மூன்றும் வேத காலத்திற்கு முன்பும் பின்பும் பல ஞானிகள் பல காலகட்டங்க்ளில் ஆராய்ந்து தங்கள் எண்ண விளக்கங்களை நல்கியுள்ளனர் என்று சுட்டியுரைத்தேன். நம் நாட்டுத் தத்துவ ஞானிகள் புற உலகப் பொருள்களை (அஃதாவது, உலகத்தை)த்