பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

133


என்று குறிப்பிடும். இந்த மனநிலை - ஓட்டையும் பொன்னையும் ஒன்றுபோல் கருதும் மனநிலை - மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் கருதும் மனநிலை - இன்னும் இராமகிருஷ்ணருக்கு வரவில்லை என்ற கருத்தையும் சிந்திக்கின்றோம்.

மீண்டும் அணுவிற்கு வருவோம். அணுவின் உட்கருவிலுள்ள துகள்கள் (புரோட்டான். நியூட்ரான்) மிக இறுகப் பிணைக்கப் பெற்றுள்ளன. நாம் இதுகாறும் அறிந்த ஆற்றல்கள் அனைத்திலும் இவை பிணைந்திருக்கும் ஆற்றல் மிகப்பெரியது. இந்த ஆற்றலை உட்கருவின் பிணைப்பாற்றல் (Binding Energy of the Nucleus) என வழங்குவர். அணுவின் உட்கருவிற்கும் எலக்ட்ரான்களுக்கும் இடையேயுள்ள மின்னாற்றலைவிட இவ்வாற்றல் பத்து இலட்சம் மடங்கு பெரியது; வன்மையும் வாய்ந்தது. ஆற்றல்தான் ஹிரோசீமாவை அழித்தது; நாகசாகியை நாசமாக்கியது.[1] இதுவே அணுகுண்டு செயற்படும் ஆற்றலாகும்.

(4) பொங்கல் திருநாள் : அணுவாற்றலைப் பேசிக்கொண்டிருக்கும் நமக்குப் பொங்கல் திருநாளும் நினைவிற்கு வருகின்றது. இந்திரனை மருதநிலக் கடவுளாய்த் தொல்காப்பியம் குறிப்பிடும். அவனுக்கு ‘மேகநாதன்’[2] என்ற பெயரும் உண்டு. அவனே மழைக்கடவுளாகவும் பிற்கால இலக்கியங்களில் குறிப்பிடப்பெறுகின்றான். உயிர்களுக்கு இன்றியமையாத வெப்பத்தையும் ஒளியினையும் தருபவன், ஆதவன். ஆகவே, கடவுளாகின்றான். பொங்கலன்று அவனுக்கு வழிபாடு நடைபெறுகின்றது. இந்த வழிபாட்டின் தத்துவம் அறிவியலடிப்படையில் அமைந்துள்ளது. இதனை,


“காதல் கொண்டனை போலும் மண்மீதே
     கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே,
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
     மண்டி னாள்இதில் ஐயம்ஒன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
     தோன்று கின்ற புதுநகை என்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
     ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.”[3]


  1. 50. ஹிரோசீமா, நாகசாகி என்பன ஜப்பானிலுள்ள நகரங்கள். இரண்டாம் உலகப் பெரும் போரில் அமெரிக்க அணுகுண்டுகளால் அழிக்கப்பெற்றன.
  2. 51. இராவணனின் மூத்த மகனின் பெயரும் இதுவே. பிற்காலத்தில் இந்திரனைப் போரில் வென்று ‘இந்திரசித்து’ என்ற பெயர் பெற்றான்.
  3. 52. பா.க. ஞாயிறு வணக்கம் - 2