பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

141


பெயர்களிலும் தேவிக்கு முதலிடம் இருப்பது கருதத்தக்கது. இம்மாபினைக் கருதியே இல்லக்கிழத்தியர்கள் தம் கணவன்மார்களின் பெயரைத் தம் பெயர்களுடன் சேர்த்து ‘விசயலக்குமி - இராமகிருஷ்ணன்’, ‘பிரேமா - இராமலிங்கம்’, ‘தனலட்சுமி - துரைசாமி’, ‘கல்யாணி-துரை’, ‘கீதா-அரங்கராசன்’, ‘யசோதா - ஐயபால்’ என்றெல்லாம் பெயர்கள் வழங்கி வருவதைக் காணலாம்.

வைணவத்தில் இறைவனும் இறைவியும் பிரிக்கப்பெறாது ஒன்றாய்க் கருதப்பெற்றாலும், செயல்முறையில் அவர்களைத் தனித்தனியாய்க் கருதும் மரபும் உண்டு.சட்டத்தின் அடிப்படையில் ஆட்சிபுரியும் இறைவனும், அன்பின் (கருணையின்) அடிப்படையில் ஆட்சிபுரியும் இறைவியும் இணைத்து செயற்படுவதால், சட்டத்தின் அன்பும் அன்பின் சட்டமும் உயிர்நிலையாய் ஒன்றோடொன்று பிணைந்து தெய்விக இயல்பாய்க் காட்சி அளிக்கின்றன. அறநூல்கள் வினையின் ஆட்சியை வலியுறுத்துகின்றன. சமயம் கருணையின் வரம்பற்ற நிலையை உணர்த்துகின்றது. அறத்தின் அடிப்படையில் அமைந்த சமயம் இரண்டன் உரிமைகளையும் சீர்தூக்கிப் பொருத்தமுறச் செய்கின்றது. இதனையே வேதாந்த தேசிகரும், “ஒண்டொடியான் திருமகளும் தானும் ஆகி” (தே. பி. 85) என்று இறைவன் நிலையைக் குறிப்பிட்டார். திருமகள் - பெரிய பிராட்டியார்:தூண் - இறைவன், நாராயணன். மணிவாசகப்பெருமானும் ‘அம்மையே அப்பா’ (திருவா. 536) என்பதில் அம்மையை முதலில் விளித்தார். வள்ளல் பெருமானும் ‘அம்மை அப்பன் என் ஆருயிர்த் துணைவன்’ (திருவருட்பா - இரண்டாம் திருமுறை 1333) என்ற தொடரில் முதலில் அம்மையைக் குறிப்பிடுதல் காணலாம். வைணவத்திலுள்ள பிராட்டியின் புருஷகாரம் (= தகவுரை கூறுதல்) ஓரளவு பிற சமயங்களிலும் ஊடுருவி நிற்றல் காணலாம். தேவி வழிபாடு சைவத்திலும் உண்டு, வைணவத்திலும் உண்டு. சைவத்திற்கு எடுத்துக்காட்டு அபிராமி அந்தாதி; வைணவத்திற்கு எடுத்துக்காட்டு முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார் இயற்றிய திருக்கண்ணமங்கை மாலை.

இவையெல்லாம் முற்றிலும் சமய அடிப்படையில் அமைந்த பெண் தெய்வ வழிபாட்டுத் தெய்வப்பனுவல்கள். அறிவியல் காலத்தில் வாழ்ந்த பாரதியாரின் சக்தி தத்துவத்தையும் சக்தி வழிபாட்டையும் இனிக் காண்போம்.