பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


நம் நாட்டுச் சண்மதங்களுள்[1]. சாக்தம் என்பது ஒன்று. சக்தியை அடிப்படையாய்க் கொண்டு எழுந்தது. ‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற மரபு ஒன்று உண்டு. சாக்த மதம் தோன்றிய பிறகு ‘சர்வம் சக்தி மயம் ஜகத்’ என்ற தத்துவம் தோன்றிய தாய்க் கருதலாம். இதுவே பாரதியாரின் பேச்சாகவும் மூச்சாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். சக்திபற்றி அதிகமான எண்ணிக்கையில் பாடல்கள் காணப்படுவதே இக்கருத்திற்கு அரணாய் அமைத்துவிடுகிறது. பாரதியாரின் வாரணாசி வாழ்வும், கல்கத்தா வாழ்வும், புதுச்சேரியில் வாழ்ந்தபோது கொண்ட அரவிந்தரின் தொடர்பும் கவிஞரைச் சக்தி வழி பாட்டில் ஈடுபடுத்தியதாய்க் கருதுவது பொருத்தமேயாகும். அறிவியல் வளர்ச்சி பெற்ற உலகில் வாழும் நமக்குப் பாரதியின் பாடல்கள் அனைத்தும் அறிவியல் அடிப்படையில் அமைந்திருப்பவையாய்க் காணப்படுகின்றன. ‘மூன்று காதல்’[2] என்ற பாடலில் மூன்றாவதாய் அன்னை பராசக்தியின்மீது இவர் காதல் கொண்டதாய்க் கூறுவர். இவள் ஒருநாள் இரவில் வருகின்றாள், கன்னி வடிவமாய் வருகின்றாள்; இவளைக் கண்ட களிப்பில்,

“அன்னை வடிவமடா ! - இவள்
        ஆதி பராசக்தி தேவியடா ! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
        யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா”[3]

என்று எக்களிப்பில் மகிழ்ச்சிப் பெருக்கை வெளியிடுகின்றார். வாணி, சீதேவி, பார்வதி ஆகிய இம்மூன்று தேவியரும் ஒன்றாய் இலங்குபவளே மாதா பராசக்தி என்பது கவிஞரின் அதிராக் கொள்கையாகும். எனவே,

“மாதா பராசக்தி வையமெல்லாம் நீநிறைந்தாய்,
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே”[4]

என்று கூறுவர்.


  1. 63. சண்மதங்களாவன: சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்தியம், சாக்தம் என்பனவாகும்
  2. 64. தோ. பா. 63 மூன்று காதல் - 4
  3. 65. தோ. பா. 63 - மூன்று காதல் - 8
  4. 66. தோ. பா. நவராத்திரிப்பாட்டு - 1