பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

149


 என்பது. ஆதிமனிதன் ஆநுபவத்தில் அனைத்தையும் படிபடியாய் அறிந்துகொண்டான்: கூட்டு வாழ்க்கை - சமுதாய வாழ்க்கை - அமைந்த பிறகு அடிப்படைத் தேவைகனை வேளாண்மையால் நிறைவுசெய்துகொண்டான் உறையுள், உடை, பாதுகாப்பு முறைகள், அணிகள் முதலியவை படிப்படியாய் வளர்ந்தன. அறிவியல் போக்கில் என்று சொல்லக்கூடிய உயிரியல், மருத்துவம், கணிதம், வானியல், போக்குவரத்து முறைகள் யாவும் படிப்படியாய் வளர்த்தன.

'சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற இரண்டாவது பிரிவில், பல்வேறு சமயங்களைக் கூறி, அவற்றில் ஏற்பட்ட ஒருமைப்பாட்டை விளக்கினேன். ஐம்பெரும் பூதங்களால் இத்த அகிலத் தோற்றம் நிகழ்ந்தது என்ற பண்டையோரின் சிந்தனைகளை எடுத்துக்காட்டினேன். அடுத்து, வைதிகச் சமயங்களாகிய சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் என்பவை பற்றியும், வேதாந்த சமயங்களாய் அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் என்பவைபற்றியும்; ஆகமங்களை முக்கிய அடிப்படையாய்க் கொண்ட சைவ சித்தாந்தத்தைப்பற்றியும் சுருக்கமாய் எடுத்துரைத்தேன். புறச்சமயங்களாகிய உலகாயதம் (சாருவாகம்), ஆசீவகம், சமணம், பெளத்தம் ஆகியவற்றையும் அவற்றின் கொள்கைகளைப் பற்றியும் சற்று விரிவாகவே எடுத்துரைத்தேன். வைதிகச் சமயங்கள் யாவும் உலகப் படைப்புக்கு இறைவனே நிமித்த காரணமாய்க் கொள்வதையும் புறச்சமயங்கள்யாவும் அணுக்களிலிருந்தான் உலகம் தோன்றுவதாய்க் கொள்வதையும் வலியுறுத்தினேன்.

மூன்றாவது பிரிவில் அறிவியல், சமயம், தத்துவம் இவை இணைந்து கிடப்பதை விளக்கும் போக்கில் அண்டங்களின் அமைப்பையும் அணுவின் அமைப்பையும் விளக்கி, இரண்டன் அமைப்புகளையும் பொருத்திக் காட்டி, 'அண்டத்தைப் போலவே பிண்டமும்' என்ற முதுமொழியின் உண்மையையும் விளங்கச் செய்தேன். 'ஆதவனே ஆற்றல் மூலம்' என்பதையும், அந்த ஆற்றலையே ஆருயிர்கள் (விலங்குகள், பறவைகள் உட்பட) பல்வேறு வடிவங்களில் நுகர்கின்றன என்றும், இதற்கு அறிகுறியாய்த்தான் உழவர்கள் பொங்கல் திருநாளாய் - தமிழர் திருநாளாய் - கொண்டாடுகின்றனர் என்றும் விளக்கினேன்.