பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


 இவ்வுலகம் தோன்றிய நாள்தொட்டு மக்களிடையே ஏதோ ஒருமுறையில் சமய வளர்ச்சி நிலவி வருகின்றது. காலப்போக்கில் மக்களின் அறிவு முதிர்ச்சிக்கேற்ப இச்சமய வளர்ச்சியும் பல்வேறு திசைகளில் பல்வேறு கொள்கைகளுடன் கூடிய பல்வேறு பிரிவுகளாக விரிந்துவிட்டன. இங்ஙனம் பல்வேறு பிரிவுகளாக வளர்ந்த சமயம் ஏதோ ஒருமுறையில் மக்களின் உயிரோடும் உடலோடும் ஒன்றி நிற்கின்றது. பகலவனையும் கதிர்களையும் வெவ்வேறு வகையாகப் பிரித்தற்கியலாதது போலவே, சமயத்தையும் மக்களையும் தனித்தனியே பிரித்தற்கியலாது. அதனால் சமயம் என்பதற்கு நெறி, கொள்கை என்ற பெயர்களும் ஏற்படலாயின. மக்கள் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குடன் நடத்துவதற்கு அமைத்துக்கொண்ட நன்னெறிகளின் தொகுதியே சமயம் என்று வழங்கப்பெறுவதாகக் கொள்ளலாம்.

அடுத்து ‘தத்துவம்’ என்ற சொல்லின் பொருளை நோக்குவோம். தத் + துவம் = தத்துவம் என்றாகும். ‘தத்' என்ற வடசொல் 'அது' என்ற பொருள்படும்; ‘துவம்' என்பதற்குத் ‘தன்மை’ என்பது பொருளாகும். பிரபுத் தன்மை, சகோதரத்தன்மை என்னும் பொருளில் பிரபுத்துவம், சகோதரத்துவம் என்னும் சொற்கள் வழங்குதலைக் காணலாம். ‘துவம்’ என்னும் விகுதி பண்புப்பொருள் பயத்தலின், ‘தத்துவம்’ என்ற சொல் 'அதன் தன்மை’ எனப் பொருள்படும். ‘அது’ என்னும் சுட்டுப் பெயர் சமயந்தோறும் வேறு பொருளைக் குறிக்கும். ஆதலின், பொருள் தன்மைகளை ஆராய்ந்து மெய்ம்மையினை நிலை நாட்டும் அறிவுக்கலைக்குத் ‘தத்துவம்’ என்னும் குறியீடு வழங்கப்பட்டது என்று கொள்ளலே ஏற்புடையதாகும். இந்தச் சொல்லுக்கு இணையாய் மெய்ப்பொருள் (குறள்), சமயக் கணக்கு (மணிமேகலை) என்னும் குறியீடுகள் தமிழிலக்கியங்களில் பயின்று வருதலைக் காணலாம். வள்ளுவப் பெருந்தகையும்,

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள் - 335)

என்னும் தத்துவ ஞானந்தான் தலையாய அறிவு என்று சுட்டியிருத்தல் உளங்கொள்ளத்தக்கது. மெய்ப்பொருள் என்பது உள்பொருள் (Reality) எனவும் கொள்ளத்தகும். தத்துவ மேதைகளைச் ‘சமயக் கணக்கர்’ என்று சாத்தனாரும் (மணிமேகலை)