நூல் முகம்
‘ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்;
ஒருமொழியே மலம்ஒழிக்கும் ஒழிக்கும்’ என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி ‘ஓம் நமச்சிவாய’ என்பர்;
‘அரிஅரி’ என் றிடினும்அஃதே; ‘ராம ராம’
‘சிவசிவ’வென் றிட்டாலும் அஃதே யாகும்;
தெரிவுறவே ‘ஓம்சக்தி’ என்று மேலோர்
செபம்புரிவது அப்பொருளின் பெயரே யாகும்![1]
– பாரதியார்
டாக்டர் எஸ். இராதாகிருட்டிணன் உயர்வுறு தத்துவ ஆய்வு நிறுவன இயக்குநர் டாக்டர் இரா. கோபாலகிருட்டிணன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நிமிஷகவி கே. சுப்பைய நாயுடு அறக்கட்டனைச் சொற்பொழிவுகள் - 1996-97 திட்டத்தில் (1) அறிவியல் நோக்கில் - தமிழ் இலக்கியம், (27-1-1997), (2) அறிவியல் நோக்கில் - சமயம், தத்துவம் (28-1-1997) என்னும் தலைப்புகளில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகள் இப்போது அச்சேறி நூல் வடிவம் பெறுகின்றன.
இப்பொழிவுகளின் கைப்படியைப் ‘பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் பங்காளர் திரு. செ. மெ. பழனியப்பச் செட்டியார் அவர்கள் அன்புடன் ஏற்று, அழகிய முறையில் அச்சிட்டு, நூல் வடிவமாக்கித் தமிழ்கூறு நல்லுலகில் உலவ விட்டமைக்கு அச்சான்றோருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் உரியன.
- ↑ பா. க. சுயசரிதை - 63