பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



கற்காலத்திலிருந்தே மனித மூதாதையர்கள் உலகம், ஆன்மா, கடவுள் என்ற முப்பொருள்களால் தங்கள் வாழ்வின் இன்ப துன்பங்கள் அமைவதாய் எண்ணினர்; அநுபவத்தால் உணர்ந்தனர். இவற்றைப் பற்றிய உண்மைகளைத் தேடவும் முற்பட்டனர். இவற்றுள் உலகம்பற்றிய அறிவே அறிவியலாகவும், ஏனைய ஆன்மா, கடவுள் ஆகிய இரண்டும் சமயம், தத்துவங்களாகவும் கருதப்பெறுகின்றன.

உலகம் என்பது நாம் வாழும் பூமியை மட்டிலும் குறிக்காது. இந்த அண்டசராசரங்களையே குறிக்கும். அண்டங்கள் யாவும் அடங்கிய அகிலத்தைக் (Universe) குறிக்கும். தொடக்க காலத்தில் இந்த அகிலத்தைப் பற்றிய தவறான கருத்துகளே மனிதர்களிடம் இருந்தன. சந்திரன், சூரியன், நெருப்பு இவற்றைக் கடவுள்களாகக் கருதி வழிபட்டனர். கி. மு. 6ஆம் ஆண்டுமுதல் இத்தகைய நம்பிக்கைகளைத் தவிர்த்துப் பகுத்தறிவு முறையில் அறிஞர் சிந்திக்கத் தொடங்கினர். இதுவே அறிவியலின் தொடக்கம். ஆயினும், அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத சிந்தனை ஞானமும் தொழில் நுட்பத்திறனும் ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்தன என்பதை அறிய முடிகின்றது. இந்த ஞானம் பொதுவாய் அநுபவ அறிவாகவும், மூடநம்பிக்கைகள் கலந்தும் தெளிவற்றுத் திகழ்ந்தது.

நீண்ட காலமாய்த் தனிமையாய் வாழ்ந்த மனிதன் நாளடைவில் சமுதாயமாய் வாழக் கற்றுக்கொண்டான். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதனே இறுதியாய்த் தோன்றியவன். சமுதாய வாழ்வில் அதன் வளர்ச்சியின் முதிர்ச்சியில் சமுதாயக் கோட்பாடுகளை வகுத்துக்கொண்டவன். இவ்வுலகப் பொருள்களுக்கும் உயிரினங்களுக்கும் தானே தலைவன் என்பதையும், அவற்றை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் தன்னிடம் மட்டிலுமே உள்ளது என்பதையும் அறிந்து தெளிந்தான்.

வாழ்விற்கு அடிப்படைத் தேவைகளாய் இருந்த உண்ணும் உணவு, ஒண்டும் உறையுள், சூழ்நிலையின் தட்பவெப்ப நிலைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உடை ஆகியவற்றைத் தக்க முறையில் அமைத்துக்கொண்டு வாழ்ந்தான். மற்ற உயிரினங்களைப் போலவே மனிதனும் இவ்வுலக இயற்கைப் பொருள்களைச் சார்ந்து வாழ்ந்தான். அவற்றிட-