பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயம், தத்துவம்

73



(iv) மிகுதி நிற்கும் சாம்பல் அங்கு மண் இருப்பதனைக் காட்டுகின்றது.5[1]

மேலைநாட்டில் அணுக்கொள்கையை முதன்முதலாய் எடுத்துக்கூறியவர் டெமாக்டரிடஸ் (Democritus) என்பவரே. இவரே மேலை நாட்டு அணுக்கொள்கையின் தந்தையுமாவார். இவருடைய கொள்கையினை டிண்டால் (Tyndall) என்பார் அடியிற்கண்டவாறு சுருக்கிக் கூறுகின்றார்.

(i) இல்லது வாராது; உள்ளது போகாது. அணுத்திரளைகள் (Molecules) கூடியும் பிரிந்தும் வரும் மாறுதலை உள்ளது. வித்தில்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை. கீழும் இல்லை.

(ii) காரணம் இன்றி ஒன்றும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் உண்டு. அந்தக் காரணத்திலிருந்து அது நியதியாய் விளைகின்றது.

(iii)உள்பொருள் எல்லாம் இரண்டேயாம். ஒன்று, அணு; இரண்டு, வெட்டவெளி. மற்றவையெல்லாம் கருத்துப் பொருளேயாகும்.

(iv) அணுக்களோ எண்ணற்றவை. அவற்றின் வகைகளும் எண்ணற்றவையே. அவை ஒன்றையொன்று தாக்கும். அப்போது எழுகின்ற பக்கவாட்டு இயக்கமும் (Lateral movement) சுழற்சிகளுமே அண்டங்களின் பிறப்பாகும்.

(v) உலகத்துப் பொருள்கள் பலவகையாய் இருப்பது எதனாலே? அவற்றின் அணுக்கள் பலபல வகையாம். எண்ணிக்கையும் பலபலவாம். அளவிலும் பலபல வகையாம். கூட்டுறவு அமைப்பிலும் பலபலவாம். இதனாலேயே பொருள்களும் பலவாகின்றன.

(v) ஆன்மா தீ அணுப்போன்றது. அதுபோல, இதுவும் நுண்ணியது. இழுமென ஒழுகுமாறு வழுவழுப்பாய் அமைவது. முழுவடிவாம் வடிவினது. எல்லா அணுக்களிலும் இதுவே இயக்கம் மிக்கதாம். இஃது உடல் முழுவதும் உள்ளும் புறமும் எள்ளுக்குள் எண்ணெய்போல் இடையீடு இன்றிப் பரவி நிற்கின்றது. இதன் இயக்கத்தின் வழியே உயிர் வாழ்க்கை என்னும் காட்சி புலப்பட்டுத் தோன்றுகின்றது.


  1. 5 உபநிடதத்தில் உயிர், போனபின் உடலானது முடிவாகப் பஞ்சபூதங்களோடு சேர்வதனைப்பற்றி மைத்ரேயியும் யாஞ்ஞவல்கியரும் பேசுகின்ற பேச்சை இது நினைப்பூட்டுகின்றது.