பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



(11) போக்குவரத்து முறைகள் : இந்த நாகரிக வளர்ச்சியில் போக்குவரத்து முறையிலும் சிந்தனையைச் செலுத்தினான், மனிதன். சக்கரங்களைக்கொண்ட வண்டிகள் அமைக்கும் முறையைக் கண்டான். மாடுகளையோ குதிரைகளையோ பூட்டித் தான் ஏறிச் செல்லவும், பொருள்களை ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்குக் கடத்திச் செல்லவும் பயன்பட்டன. இந்த வண்டிகள் தரைவழிப் பயணத்திற்குப் பயன்பட்டவை. தோணிகள், கப்பல்கள் ஆகியன செய்து கடல் பயணத்திற்கும் வழிவகுத்த பெருமை நம் மூதாதையருக்கு உண்டு. நாணயங்கள் தங்காது ஓடிக்கொண்டிருப்பனவாதலால் அவற்றிற்கு வட்டவடிவம் அமைத்தனர் போலும்.

கிரேக்கப் பேரரசர் அலெக்ஸாண்டர் படையெடுப்பால் மேலை நாட்டிற்கும் கீழை நாட்டிற்கும் தரைவழிப் பயணத் தொடர்பு ஏற்பட்டது. கிரேக்க, மேற்கு ஆசிய நாடுகளுடன் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிக காலத்திலேயே தரைவழித் தொடர்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தரை வழியாய் ஐரோப்பாவிலிருந்து சீனாவிற்குச் செல்லும் பட்டு வழி (Silk route) ஏற்பட்டதாய் அறிகின்றோம். ஐரோப்பியர் கப்பலில் உலகைச் சுற்றிய காலத்தில் கடல்வழித் தொடர்பும் ஏற்பட்டது. கொலம்பஸ் (Columbus) மேற்கிந்தியத் தீவிற்கும் அமெரிக்காவிற்கும் சென்றமை, வாஸ்கோடாகாமா (vascoda Coma) இந்தியாவிற்குப் போந்தமை போன்ற நிகழ்ச்சிகளால் கடல்வழித் தொடர்பு உறுதிப்பட்டது. இதனால் மேலை சீன நாடுகளுடன் இந்தியத் தத்துவக் கருத்துகளிலும், அறிவியல், கைவினை ஞானங்களிலும் கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் தோன்றி வளர்ந்தன.

(12) அறிவியல் வளர்ச்சி : கடவுள், ஆன்மா, உலகம் என்ற முப்பொருள் ஆராய்ச்சிகளுள் மேலை நாட்டினர் உலகம்பற்றிய ஆராய்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தினர். அதனால் அறிவியல் அங்கு அதிகமாய் வளர வாய்ப்புகள் ஏற்பட்டன. மேலை நாடுகளில் தொடக்கத்தில் அறிவியலைப் போற்றி வளர்த்த பெரியார்களாய் தேல்ஸ் (துருக்கி), பித்தகோரஸ் (கணிதம்), அனெக்சினேஸ், அனெக்சி மேண்டர், எம்பிடோக்கின்ஸ் (கிரேக்கம்), ஃபில்லிலோனஸ் (வானியல்), மோக்கிராட்ஸ் (அணுக்கொள்கை), பிளேட்டோ, சாக்கிரடிஸ், ஹிப்போகிராட்ஸ், தியோஃபிஸ்டஸ் (உயிரியல்) என்போர் குறிப்பிடத்தக்கவர்களாய்த் திகழ்ந்தனர்.