பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

85



கின்றது. தன்னைக் கருத்தா என்று கருதுவது, அகங்காரம். அகங்காரமின்றிக் கருமம் ஒன்றும் நடைபெறாது. மண்ணோடு மண்ணாய் விதை புதைந்து கிடப்பது போன்று வாசனா சொரூபமாய் அகங்காரம் முதலிய அந்தக்கரணங்கள் மூலப்பிரகிருதியுள் புதைந்துள்ளன. தக்க வேளையில் எண்ணமாகவும் செயலாகவும் வடிவெடுக்கவல்ல இயல்புக்கு வாசனை என்று பெயர். இந்த எட்டு விதப் பிரகிருதியையே இருபத்துநான்கு தத்துவங்களாய் விரித்துச் சொல்வது வழக்கத்தில் உள்ளது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கு. மெய், வாய், கண், செவி, மூக்கு என்ற ஞானேந்திரியங்கள் ஐந்து. ஞானேந்திரியங்களின் செயல்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து. இவையே தன்மாத்திரைகள். வாக்கு, கால், கை, கருவாய், எருவாய் என்ற கருமேந்திரியங்கள் ஐந்து. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்து. புருடன் எனப்படும் ஆன்மா இருபத்தைந்தாவது தத்துவம். பரமபுருடன் - புருடோத்தமன் - எனப்படும் பரம்பொருள் என்ற பரமாத்மாவுடன் சேர்த்து வைணவ தத்துவம் இருபத்தாறாகின்றது.

அணுக்கொள்கையின் கரு : பொருள்களை ஆக்கும் அடிப்படையான துகளே அணுவாகும் என்பது இன்றைய அணுவியல். இந்த உலகமும் இதனையொத்த வேறு அண்டங்களும் அணுவினால் ஆகியவையே. பூக்கள் சேர்ந்து பூமாலையாதல்போல, அணுக்கள் சேர்ந்து அண்டங்கள் ஆகின்றன. பழங்கால அணுவாதம் இதுதான்.

“செகத்தையெல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம்
சேர்த்து அணுவில் வைப்பை;அணுத் திரளை எல்லாம்
மகத்துவமாய் பிரம்மாண்ட மாகச் செய்யும்
வல்லவா நீநினைத்த வாறே யெல்லாம்”15[1]

என்று இரத்தினச்சுருக்கமாய்க் விளக்குவர் தாயுமான அடிகள். நேற்றைய பொழிவிலும் இதனைச் சுட்டி விளக்கினேன்.

‘அசித்து’ என்ற வைணவ தத்துவமும் அணு அண்டமாதலை விளக்குகின்றது. அசித்து என்பது அறிவில்லாத பொருள். இஃது எம்பெருமானுக்கு உடலாய் (சரீர - சரீரி பாவனை) இருப்பது.


  1. 15. தாயு. பாடல் - தந்தைதாய் - 6