பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

நெம்புகோலின் ஒரு முனையிலுள்ள சுத்தியால் மணியடிக்கப்படுகிறது. அந்நெம்பு கோலின் மறு முனை உருளையின் மீதுள்ள ஊசியுடன் ஈடுபடுகிறது. அவ் உருளையின் மீது சம இடைவெளியில் பல ஊசிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

மணியடிக்கும் தொடர் இயங்க வேண்டிய நேரத்தையும் சுத்தியை எத்தனை முறை அடிக்கச்செய்ய வேண்டுமென்பதையும் அடைப்புத் தகட்டமைப்புக் கட்டுப்படுத்துகிறது. பரிதியில் பல சிறு துளைகளோடு கூடிய வட்டத்தகடு, மணியடிக்கும் உருளைத் தொடருடன் இணைக்கப் பட்டிருக்கும்.

தொடர்பு இயங்கும் வரை, நெம்புகோல்களின் பகுதியாகிய கொக்கி வட்டத்தகட்டின் பரிதியுடன் இணைந்திருக்கும். அடைப்புத் தகடு, தொடருடன் சுழலும். பரிதியிலுள்ள துளைக்கு நேராகக் கொக்கி வரும்போது, கொக்கி துளையில் விழும். தொடர் இயங்குவதும் நின்றுவிடும்.

பரிதியில் உள்ள துளைகளுக்கிடையிலுள்ள தொலைவு, ஏற்ற விகிதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். துளைகள், ஊசிகள் இவற்றின் எண்ணிக்கையை அதிகமாக உடைய இன்னும் சிக்கலான அடைப்புத் தகட்டமைப்பைக் கொண்டு, கடிகாரம் அரை மணியைக் காட்டவும் மணியடிக்கச் செய்யலாம்,