பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


92. ஸ்னெல்லன் ஆய்வு எழுத்துகள் யாவை?
கண் பார்வையை ஆய்ந்து பார்க்க ஓர் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் பல வகை எழுத்துகள்.

93. கான் ஆய்வு என்றால் என்ன?
நோயாளிகளின் தெளிநீரை, மேகநோய் உள்ளதா என்று ஆய்ந்து பார்க்கும் சோதனை. மிக எளியதும் வசதியானதுமான ஆய்வு.

94. சான்டெக்-ஆஷ்கிம் ஆய்வு என்றால் என்ன?
கருப்பேற்றை உறுதி செய்யும் ஆய்வு.

95. ஆப்கார் புள்ளி எண் என்றால் என்ன?
புதிதாகப் பிறந்த குழந்தையின் உயிர்ப்புத் திறனை மதிப்பிடும் முறை. குறிப்பாக இதய வீதத்தையும் மூச்சு முயற்சியையும் மதிப்பிடுவது.

96. சூட்ஸ்-சார்ல்டன் வினை என்றால் என்ன?
செங்காய்ச்சலை உறுதி செய்யும் ஆய்வு.

97. வீடல் வினை என்றால் என்ன?
முறைக் காய்ச்சலுக்குரிய குருதி ஆய்வு.

98. வெசர்மன் வினை என்றால் என்ன?
ஒரு குருதி ஆய்வு, ஆய்வுக்காக எடுக்கப்பட்ட குருதியில் மேக நோய் உள்ளதா என்பதைக் காணும் ஆய்வு.

99. வெயில்-பெலிக்ஸ் வினை என்றால் என்ன?
டைபஸ் நோய்க்குரிய ஒருங்கொட்டல் வினை.

100. பாலிமரேஸ் தொடர்வினை என்றால் என்ன?
இஃது ஓர் உயிரியல் வேதிநுட்பம்.

101. இதனைக் கண்டறிந்தவர் யார்?
அமெரிக்க உயிர் வேதி இயலார் கேரி முல்லிஸ். இதற்காக 1993க்குரிய நோபல் பரிசைப் பெற்றார்.

102. இதன் சிறப்பு யாது?
மரபுவழி குறைபாடுகொண்ட மரபணுக்களை இனங்கான இந்நுட்பம் பெரிதும் பயன்படும். மரபாக்க வளர்ச்சிக்கு இது அச்சாணி போன்றது. தவிர, மருத்துவ ஆய்விலும் நோய் கண்டறிதலிலும் தடய அறிவியலிலும் பெரிதும் பயன்படக்கூடியது.