பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. தெய்வப் பரணி

செஞ்சொற் கவியின்பம் பயக்க வல்ல இலக்கியங்கள் எல்லா மொழிகளிலும், எல்லா நாடுகளிலும் எண்ணற்றவை உள்ளன. எப்பெயர்களால் வழங்கினாலும் நம் தமிழ் மொழியில் உள்ள ஒன்பது சுவைகள் அவ்விலக்கியங்களில் மலிந்து கிடந்தோ விரவிக் கிடந்தோ அவற்றைச் சிறப்பித்துப் படிப்போரை இன்பக்கடலில் திளைக்கச் செய்கின்றன காப்பியங்களும், பிரபந்தங்களும், தனிப்பாடல்களும் இச் சுவைகளைக் கொண்டு இலங்குவதை இலக்கியச் சோலைகளில் புகுந்து பார்ப்போர் நன்கு அறிவர். பல்சுவைகள் ததும்பும் பிரபந்தங்களில் கலிங்கத்துப்பரணியும் ஒன்று; சுவைநலங் கனிந்த ஓர் அற்புதச் சிறுபிரபந்தம்; 'பரணிக்கோர் சயங்கொண்டான்' என்று புலவர்களால் சிறப்பித்துப் பாராட்டப் பெறும் சயங்கொண்டார் என்ற புலவர் பெருமானால் பாடப்பெற்ற நூல்.

கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாடு களப்பிரர் என்ற வேற்று மொழியார் ஆட்சியிலிருந்து கிட்டத்தட்ட மூன்றரை நூற்றாண்டுகள் பல்வேறு சீர்கேடுகளை அடைந்தது. இவர்கள் ஆண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் 'இருண்ட காலம்' என்று குறிப்-