பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அறிவுக்கு விருந்து


 ஆழ்த்துகின்றது. இச்செய்திகள் ‘காடு பாடியது’, ‘கோயில் பாடியது’, ‘தேவியைப் பாடியது’, ‘பேய்களைப் பாடியது’ போன்ற அத்தியாயங்களில் கூறப்பெறுகின்றன. காளிதேவியும் பேய்களும் வாழும் காடு பாலைநிலம் ஆகும். அக் காட்டின் வெம்மையைத் தாங்கமாட்டாமல் கருமுகிலும் வெண்மதியும் ஓடுகையில் அவற்றின் உடலில் தோன்றிய வேர்வையே, பனிநீராகப் பெய்கின்றது.

காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும்
வெண்மதியும் கடக்க அப்பால்
ஓடிஇனைத் துடல்வியர்த்த வியர்வன்றோ
உருபுனலும் பனியும் ஐயோ.6[1]

[கடத்தும்-கடப்போம்; முகில்-மேகம்: மதி-நிலா, புனல்-மழை நீர்]

என்ற தாழிசையால் இதனை அறியலாம். இந்நிலத்தின் வெம்மைக்குப் பயந்துதான் தேவர்களும் நிலத்தில் கால் வைத்து நடப்பதில்லை. அவர்கள் விண்முகட்டிலிருந்து கொண்டே கார்மேகங்களாகிய திரைச்சீலையிட்டுச் சந்திரனாகிய ஆலவட்டத்தால் விசிறிக்கொள்ளுகின்றனர். அந்த வெம்மை நிலத்திலிருந்து வீசும் காற்று தம்மிடம் வாராதிருக்கும் பொருட்டே கடல்கள் ஓயாது தம் அலைகளைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. திக்குயானைகளும் விடாது தம் காதுகளை அடித்துக்கொண்டிருப்பதும் அதற்காகத்தான். இத்தகைய கற்பனைகளால் காட்டின் இயல்பினைக் கூறுகின்றார் கவிஞர்.

இத்தகைய காட்டில்தான் காளிதேவியின் கோவில் அமைந்திருக்கின்றது. குலோத்துங்கன் வென்று

  1. தாழி-85