பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன் நிலையில் மாறினாரில்லை. செல்வப் பெருக்கிற்காகத் தனிவாழ்வை மேற் கொள்ளவில்லை. குடும்பவாழ்வு : மாணவப்படியை மிதித்து தனி நிலைப் படியையும் தாண்டிக் குடும்ப வாழ்க்கைப் படியில் காலெடுத்து வைத்தார். 1939-ஆம் ஆண்டு பிறந்தது. திருமணமும் நிகழ்ந்தது. பெரியம்மா விருப்பப்படியே அவர்கள் வளர்த்த இடையன்பாற்சொரி இராமச்சந்திரம்பிள்ளே பெண் புனிதவதி என்ற அம்மையைத் திருமணம் செய்துகொண்டார். மனைவியோ கணவனைப் பேணும் குணம் நலம் உடையவர், மனை மாட்சிக்கான வினை மாட்சியும் உடையவர். கணவன் மன மறிந்து நடப்பவர். சார்ந்தவரைப் பேணும் அருள் குணம் உடையர், விருந்துபசரிப்பதில் பெருந்தன்மை உடையவர். மனித மாட்சியாவும், மனைவியின் மாட்சியைப் பொறுத்தது. மனைவிளக்காய் வந்த மனைவிக்கு விளக்கமாக மக்கட்செல்வமும் கண்டார். கண்மணியெனச் சொல்லும் நான்கு பெண்மணிகளும் இரு ஆண்மகவும் பெற்றார், பெற்ற மக்களால் தக்கார் எனச் சொல்லும், ஒரு பேறும் பெற்றார், அறிவறிந்த மக்களாகவும் வெளிவர முற்பட்டார். 1940-ல் ரிஷிகேசம் முதல் தென்குமரிவரை திருமுறைத் தலங்களே மூன்றுமாத யாத்திரை சென்று குடும்பத்துடன் வழிபாடு செய்துவந்தார். வெளிநாடு சென்று கதிர் காமம், திருக்கோணமலை, திருக்கேதீச்சுரம் முதலிய தலங்களையும் வழிபட்டுள்ளார். அறிஞர் கூட்டுறவு : எங்கள் இருவர்க்கும் குரு வாய் விளங்கியவர் நகராமலை வித்துவஜன சேகரர் நா. இராமலிங்கம் பிள்ளை அவர்களே. இளமைப்படிப்பு கற்றதோடு சாத்திரப்படிப்பையும் அவரிடமே கற்றுக் கொண்டார். அவரை அடிக்கடி தம் இல்லத்திற்கு