பக்கம்:அலிபாபா.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மார்கியானாவின் மதிநுட்பம்

45


அலிபாபாவைக் கண்டான். அலிபாபா அவனை அன்புடன் அழைத்துக்கொண்டுபோய், மார்கியானாவைக் கண்டு, “விருந்தினர் இதோ வந்துவிட்டார். அவருக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்! நான் முன்புறம் படுக்கச் செல்கிறேன். நாளை அதிகாலையில் நான் குளிப்பதற்காக ஹம்மாமுக்குப் போக வேண்டும். ஆகையால், எனக்கு வேண்டிய வெளுத்த துணிகளை அடிமைப் பையன் அப்துல்லாவிடம் கொடுத்துவை. காலையில் நான் குளித்துவிட்டு வந்ததும் குடிப்பதற்கு நல்ல சூப்பும் தயாரித்து வை!” என்று சொன்னான்; அவள், “அவ்விதமே செய்கிறேன்!” என்று சொன்னாள். பின்னர், அலிபாபா உறங்கச் சென்றான். தலைவன், இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, மறுபடி கொட்டகைக்குச் சென்று கழுதைகளைப் பார்த்துவிட்டு, நடுச்சாமத்தில், தான் கை தட்டியுடன், எல்லாத் திருடர்களும் தங்கள் வாள்களால் தோலினால் செய்த தாழிகளைக் கீறிப் பிளந்து கொண்டு வெளிவர வேண்டுமென்று அவர்களுக்குத் தனித் தனியாகச் சொல்லிவிட்டு, மாடியில் தனக்காக ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குச் சென்றான். மார்கியானா ஒரு கைவிளக்கை எடுத்துக்கொண்டு அவனுக்கு வழி காட்டியதுடன், “உங்களுக்கு ஏதேனும் தேவையாயிருந்தால், என்னை அழையுங்கள்! உங்கள் பணிவிடைக்காகக் காத்திருக்கிறேன்!” என்றும் கூறினாள். தலைவன் மேற்கொண்டு தனக்கு எதுவும் தேவையில்லை என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/47&oldid=512497" இலிருந்து மீள்விக்கப்பட்டது