பக்கம்:அலிபாபா.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அலிபாபா


காஸிமின் மைந்தன். அவனிடத்தில் திருடர் தலைவனுக்கு அலாதியான அன்பு இருந்து வந்தது. அவனுக்குத் தலைவன் அடிக்கடி விருந்துகளும் நடத்தினான். அவனும் தலைவனுக்கு தானும் விருந்தளிக்க விரும்பினான். அவனுடைய வீடு சிறிதாகவும், வசதியில்லாமலும் இருந்ததால், அவன் தன் சிற்றப்பனான அலிபாபாவிடம் தன் வீட்டிலேயே விருந்து தயாரிப்பதாயும், வெள்ளிக்கிழமை யன்று மாலை அந்தப் புதிய வணிக நண்பனை அழைத்து வரும்படியும் கூறினான். விருந்து என்று முன்னதாக அறிவிக்காமல், நண்பனுடன் உலவச் செல்லும்பொழுது அவனை அங்கே அழைத்து வரும்படியும் அவன் ஆலோசனை சொன்னான்.

திருடர் தலைவன் குவாஜா ஹஸன் என்று பெயர் வைத்துக்கொண்டிருந்தான். காஸிமின் மகன் யார் என்பது முதலில் பல நாள் அவனுக்குத் தெரியாமலிருந்தது. பின்னர், ஒருநாள் அலிபாபா தன் அண்ணன் மகனைப் பார்க்க வந்திருந்தான். அப்பொழுது ஹஸன் அவனை யாரென்று தெரிந்துகொண்டு, பின்னால், காஸிம் மகனிடம் அவன் யார் என்று வினவினான். அந்தப் பையன் விவரம் தெரியாமல், “அவர் என் தந்தையின் உடன்பிறந்தவர்” என்று சொல்லிவிட்டான். அதிலிருந்துதான் போலி வியாபாரியான ஹஸன் அவனுடன் அதிகமாக அளவளாவிப் பழகி வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/62&oldid=512507" இலிருந்து மீள்விக்கப்பட்டது