பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

மக்களை யவனர் என்றும் அழைத்தல் வழக்கம். யவன நாகரிகமே ஐரோப்பா முழுவதும் பரவி, ஆங்காங்கே கலைகளும், விஞ்ஞானமும், தத்துவ ஆராய்ச்சியும் வளர்வதற்கு உறுதுணையாயிருந்தது. இன்றைக்கும் பல நாட்டுக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கல்வி, அரசியல், தத்துவம் முதலிய துறைகளில் பண்டையவன நூல்கள் பயிலப் பெறுகின்றன. யவன நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே சில அறிஞர்கள் தோன்றி, சமுதாய வாழ்க்கை பற்றியும் மக்களின் ஒழுக்கம் பற்றியும் போதனைகள் செய்தனர். அவைகளை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டின் தென் பகுதியிலே ஸ்பார்ட்டா அரசும் வடபகுதியில் அதீனிய அரசும் அமைந்திருந்தன.

இரண்டு அரசுகளுக்கும் வேற்றுமையும் பகைமையும் இருந்து வந்தன. ஸ்பார்ட்டா தலை சிறந்த ஒரு வீரனுக்குக் கட்டுப்பட்டு, வீர வாழ்க்கை நடத்தி வந்தது. அங்கே இளைஞர்களுக்குச் சிறு வயதிலிருந்தே, உடற்பயிற்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ற முறையில், கல்வித் திட்டம் அமைக்கப் பெற்றிருந்தது. மக்கள் ஆடம்பரங்களை விரும்பாமல் எளிய வாழ்க்கை நடத்தி வந்தனர். சுக வாழ்வையும், இன்பங்களையும் வெறுத்து, எத்தகைய துன்பத்தையும் எதிர்கொண்டு ஏற்று வீரத்துடன் போர் புரிவதில் அவர்கள் இணையற்றவர்கள். அவர்களிலே ஏழை, பணக்காரர் என்ற வேற்றுமை குறைவு; எல்லாரும் கூடியிருந்து உணவு உண்பது அவர்கள் வழக்கம். குழந்தைப் பருவத்திலிருந்தே மக்கள், வாய்க்கு வந்தபடி