பக்கம்:அலைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்று O 143



காலேஜிலிருந்து-அங்கு மட்டும் வீட்டை நினைத்துக் கொண்டே பாடம் ஏறுமா?

சாப்பிட்டாளோ இல்லையோ?

குழந்தைபோல் அவளுக்கு அவன் வாயில் சோற்றை ஊட்டியதை பார்த்து-பார்க்க முடியாமல்-ஒரு சமயம் நான்-நான் வந்தது தெரியாமல், திரும்பி வந்திருக்கிறேன். தாய்க்கும் பிள்ளைக்கும் தனியான அப்புனித சமயங்களில் நாய்போல் புக நான் யார்?

காலேஜிலிருந்து வீடு திரும்பி வந்தால் அம்மா வீட்டிலிருப்பாள் என்பது என்ன நிச்சயம்? எங்கேயாவது அலைந்து கொண்டிருப்பாள். வீட்டில் போட்டது போட்டபடி.

கதவு திறந்தது திறந்தபடி.

அவனும் அப்படியே தேடக் கிளம்பிவிடுவான்;

அப்படியே தேடிக் கண்டுபிடித்தாலும் லேசில் திரும்பி வருவாளா?

“அம்மா!-’’

"இருடா! - "பிள்ளை கையை உதறுவாள்- "அவளும் வரட்டும்.'”

"அம்மா!"

"அபிதாவும் வரட்டும், சேர்ந்து போகலாம்."

"அபிதா வரமாட்டாம்மா!"

"ஏன் வரமாட்டா? இந்த வழியாத்தானே தூக்கிண்டு போனா?" -மாரே வெடித்து விடும்போல் பையன் அழுவான்.

"அடசீ, அசடே! ஏண்டா அழறே? அவளும் வருவாடா. சேர்ந்து போவோம்!"

ஒரோரு சமயம் இந்த வாசலெதிரே, சன்னிதியைப் பார்த்தபடி, மறந்தது எதையோ நினைவு கூட்டிக்கொள்வது போல், நெற்றியைச் சொரிந்து கொண்டு மாமி நிற்கையில் எனக்குத் தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/145&oldid=1288533" இலிருந்து மீள்விக்கப்பட்டது