பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



120 ❖ லா. ச. ராமாமிர்தம்


தால்தான் அவள் அநாதியாய், அத்தனை ஸெளந்தர்யவதியாய் விளங்குகிறாள்.

கமலாம்பிகை பற்றி அகிலாவுக்கு குருக்களின் படபடப்பு உண்டோ? யார் கண்டது? வெளியில் தெரியவில்லை. சுபாவத்திலேயே அவள் கொஞ்சம் கெட்டி. வளவளவென்றிருக்க மாட்டாள். சற்று விரக்தியானவள் கூட கோவிலில், தேவி வழிபாடில் தன் கணவனின் உற்சாக ஈடுபாடுடன் அவள் இழையாவிட்டாலும் அவளுக்கும் பக்தி உண்டு. ஆசாரம் உண்டு.

குருக்கள் தூக்கத்தின் மெத்தான ஆலிங்கனத்தில் புரண்டு படுத்தார். செருகிய இமைகளின் கீற்றில் எட்ட ஒரு நீலப்பொறி தெரிந்தது. அது கிட்டக் கிட்ட நெருங்குகையிலேயே பெரிதாகிக் கொண்டே வந்து, அந்த ராக்ஷஸச் சுடரின் தண்ணொளி கண் கூசிற்று. கண்ணைக் கசக்கிக் கொண்டு விழித்தபோது பொலபொலெனப் புலரும் வேளை, திண்ணையில் அவர் பக்கத்தில் வெகு நெருக்கமாய், அவர்மேல் இடித்துக்கொண்டு ஒரு உருவம் உட்கார்ந்திருந்தது. பதறி எழுந்தார்.

“நான்தான் அப்பா!” குரலில் ஆண் கார்வை. அவர் தோளைத் தொட்டாள். சிரித்தாள். ‘ஏன் பயப்படறேள்?’ பாவாடைத் தாவணியில் மதமதவெனப் பதினாறு.

குருக்களுக்கு முகத்தின் அங்கங்கள் துடித்தன. வாயுள் நாக்குத் தடித்தது. இழுத்துவிடுமோ? “நீயா?”

“ஏன் நானாயிருக்கப்படாதா?”

கைகள் கூப்பிக்கொண்டன.

“ஜகன்மாதா, நீ என்னை அப்பா என்று அழைக்கும் விபரீதம் என்ன? அபராதம் ஏதேனும் நேர்ந்துடுத்தா? மன்னிச்சுடு தாயே, மன்னிச்சுடு.” கண்கள் துளும்பின.