பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134 ❖ லா. ச. ராமாமிர்தம்


கட்டுப்படுத்த கிருஷ்ணாவால்தான் முடியும். இவனும் அவளுக்குத்தான் படிவான். அதுவும் கிருஷ்ணா போனபின் இவனுடைய லூட்டி தாங்கக் கூடியதாயில்லை.

ஆமாம், கிருஷ்ணா என்னவானாள்? மூணு மாசமா அவளிடமிருந்து கடிதமில்லை. கடைசியாக வந்ததில், உண்டாகியிருப்பதாய் ஏதோ வார்த்தையோடு வார்த்தையா எழுதியிருந்தாள். எத்தனை மாசம், எப்போ உறுதியாச்சு? உறுதியாச்சா? உடம்பை ஏதேனும் பண்ணறதா? இதெல்லாம் பத்தி ஒண்ணும் காணோம். என்னவோ 'மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்த' மாதிரி ஒரு வரியிலே சேதி சொல்லிட்டா ஆச்சா? அம்மாவுக்குப் பெண் எழுதற மாதிரியாயிருக்கு? தானே அதில் சம்பந்தப்படாத மாதிரி! கூடவே ஒரு வாக்கியம். 'இந்தக் குழந்தை பிறந்தாலும், எனக்கு கோபியைவிட முக்கியமாயிருக்காது.' உஷைக்குக் கீழுதடு ஏளனத்தில் பிதுங்கிற்று. இதுமாதிரி எத்தனை பேரைப் பார்த்தாச்சு! சிசு பூமியில் விழுந்துடட்டும், அப்போன்னா தெரியப் போறது! நான் பார்க்காமல் இருக்கப் போறேனா?

அப்பிடியானால் வளைகாப்பு, பூச்சூடல், சீமந்தம் எதுவும் கிடையாதா? பிரசவத்துக்கேனும் கொண்டு வந்து விடுவாளா? சந்தேகம்தான். மஸ்கட் என்ன கொல்லைப் புறமா? குடும்பமே மஸ்கட்டுக்குச் சம்பாதிக்கப் போயிருக்கு. பெண்டுகளும் உத்தியோகம் பண்ணறாளோ என்னவோ? எல்லாரும் படிச்சவா. நம்ம பெண், வீட்டுக்கு மருமகள்னு கெளரவப் பேரில், வீட்டுக்குச் சமையல்காரி. அப்படிப் பெண் பிடிக்கத்தானே இங்கே வந்திருக்கா. இல்லாட்டா நம்மோடே ஏன் சம்பந்தம் தேடறா?

அத்தோடே கலியாணத்தன்னி ராத்திரியே பிள்ளை வீட்டாருடன் உரசல் வந்துடுத்து. அதுவும் கோபியால்தான்.