பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வேண்டப்படாதவர்கள் ❖ 135


அக்காவை மணவறையுள் போகவிடாது, வழக்கம் போல் அவள் பக்கத்தில் தான்தான் படுத்துக்கணும்னு ஒரு நிர்த்தூளி பண்ணியிருக்கான் பாருங்கோ--இப்போ நெனச்சால் கூட சிரிப்பு வரல்லே. அவன் அப்பா கையைக் கூட ஓங்கிட்டார். சம்பந்திப் பிராமணன்தான் தடுத்தார். “குட்டித் தம்பியிருக்கற இடத்துலே இது சகஜம்தானே! பையன் கையில் ஒரு லட்டைக் கொடுத்தால் சரியாப் போயிடுவான். நானே சரிபண்றேன் பாருங்கோ-அம்பி, நீ சமர்த்தோன்னோ! என் கையிலே என்ன இருக்கு பார்!-”

கோபி வீசியெறிந்த லட்டு அவர் முகத்தில் விண்டு, மாமனார் அவன் கண்களில் அந்த வெறியையும், வாயில் வழிந்த ஜொள்ளையும் கண்டு ஸ்தம்பித்துப் போனார்.

போதும் போதாத்துக்கு கிருஷ்ணா: “எல்லாரும் சேர்ந்து குழந்தையை ஏன் படுத்தறேள்? ஏற்கெனவே உடம்பு சரியில்லை” என்றுவிட்டாள்.

"ஓ அப்படியா, Izz that so?” அவர் ஆச்சரியம் அதிகரித்தது. “நந்தா, ஏமாந்துட்டோமாடா? கலியானத்துக்கு முன் இவா ஃபாமிலி மெடிக்கல் ஹிஸ்டரியையும் செக் பண்ணியிருக்கனணுமோ? வகையா மாட்டிண்டுட்டோமோ? ஆமா, அஞ்சு வயசுங்கறா, பையன் பத்து வயசு வளத்தியாயிருக்கான்! இன்னுமா அக்காகிட்ட படுத்துக்கறான்?”

விஷயத்தின் ட்ராக்கை மாற்றிவிட்டது மாப்பிள்ளையின் சாதுர்யம்தான்.

“என்னப்பா, சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ணிண்டு, அனாவசியக் கவலைப்பட்டுண்டு? நாமோ பெண்ணை அழைச்சுண்டு போயிடப்போறோம். அவள் தம்பியுமா கூட்டிண்டு போப்போறோம்? watch your B.P., Dad..”

10