பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



136 ❖ லா. ச. ராமாமிர்தம்


அச்சமயம் அவர்கள் கண்கள் ஒன்றோடு ஒன்று பூட்டிக் கொண்டபோது கிருஷ்ணாவின் பார்வை நன்றி சொரிந்தது. ஆனால் அவன் கண்களில் அவள் சந்தேகமும் சஞ்சலமும் தான் படித்தாள். “இதோ பார், எது எப்படியோ, இப்போது நான் உன் பக்கம் பேசிட்டேன். இனிமேல் நீதான் ஒத்துழைக்கணும்” என்று அவை கெஞ்சின.

அந்த வாரமே பிள்ளைவீட்டாரை வழியனுப்ப விமானத் துறைமுகத்துக்குப் போகும்போது கோபிக்குத் தூக்க மருந்து கொடுத்துத் தூங்க வைத்து வீட்டை வெளியில் பூட்டிக் கொண்டு போம்படிதான் ஆயிற்று. Highly risky. வேறு வழியில்லை. தலையெழுத்து.

பிள்ளைவீட்டார் தாங்கள் நேரிடையாகக் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், கிருஷ்ணாவிடமிருந்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கடிதம் ஒழுங்காய் வந்து கொண்டிருந்தது. அந்த மட்டுக்கு அவாளுக்குப் பெரிய மனசுதான். இல்லை, மாப்பிள்ளை மனசா?

கடிதங்களில் புக்ககத்தைப் பற்றிக் குறையாகவோ, புகாராகவோ ஏதுமில்லை. பெண் ஜாக்கிரதையாக இருக்கிறாளா அல்லது நன்றாகவே வைத்துக் கொள்கிறார்கள் என்று அர்த்தமா? இல்லை, தன்வீடு என்று ஆனபின், விட்டுக் கொடுக்கவில்லையா? கிருஷ்ணா அப்படிப்பட்டவள்தான். மேலுக்குப் பவ்யம், பணிவுக்கடியில் எப்பவுமே ஒரு திமிர் அவளுக்கு உண்டு. சுபாவம்.

அவளுடைய எல்லாக் கடிதங்களும் கோபியைப் பற்றித் தான் விசாரிக்கும், கவலைப்படும். லேசாய் அங்கு இங்கு தேம்பும்.

ஆனால் மூன்று மாதங்களாகக் கடிதம் இல்லை.