பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138 ★ லா.ச. ராமாமிர்தம்

தள்ளிக் கொண்டு, கலைந்து குலைந்து உடனேயே மறதியில் உருகிப் போயின. அவை அவனைச் சூழ்ந்து கொண்டு சமயங்களில் அழுத்திய இருள் பயமுறுத்துகையில், எப்பவும் ஒரு துார வெளிச்சம் அவனுக்குத் துணை காட்டிற்று. அது என்னமோ, நாமமோ நாமத்தின் ரூபம் அக்காவின் நினைப்போ அந்தப் பெயர் நாக்கில் சுழல்கையில், ருசியில் வாயோரம் எச்சில் வழிந்தது. விழிகள் தனி ஒளியில் விரிந்தன.

கிருஷ்ணா.

3

கிருஷ்ணாவுக்கு இருபது வருடங்களுக்குப் பின், இடையில் பேறு இலாது, கருவுற்றதாய் உணர்ந்ததும், உஷை வியப்பும், வெறுப்பும் கோபமுமானாள். சே, இதென்ன விபரீதம்! இப்போ கிருஷ்ணாவுக்குக் கலியாணமாகியிருந்தால், தான் பாட்டியாகி இருப்பாளே!

கலைக்க முயற்சிகள் பலிக்கவில்லை. வேளை தப்பிப் போச்சோ, அல்லது கரு அத்தனை வலுவோ? அவருக்கு இஷ்டமில்லை. அவர் தெய்வ பக்தி மிக்கவர். சிசுஹத்தி மஹாபாபம்.

“அதனால் என்ன மாமி? வீட்டுக்கு ஒரு ஆண் ஆளப் பிறக்க வேண்டாமா? வம்சம் விருத்தியாக வேண்டாமா?” என்று சொன்னவர் சொன்னாலும், அவர்களே தங்கள் புறங்கைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிக்கவில்லை என்று சொல்ல முடியுமா?

இது இல்லேன்னு ஏங்கினேனா, பிள்ளை வரம் கேட்டேனா? ராமேசுவரம் போனேனா? அதுவும் வயசான பெண்ணை வீட்டில் வெச்சுண்டு! கஷ்டம், கஷ்டம்!