பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வேண்டப்படாதவர்கள் ❖

139


தன்னைத்தான் நொந்துகொள்ள முடியும். யாரிடம் சொல்லிக்க முடியும்? சொல்லிக்கணுமா என்ன, கைப் புண்ணுக்குக் கண்ணாடியா?

அதன் பிறப்பும் 'திடீர்'. இன்னும் இருபது நாளைக்கு முன் எதிர்பார்க்கவில்லை. அடுக்குள்ளில் பாதி சமையலில் வலி கண்டுவிட்டது. படுக்கை அறைக்குள் போக நேர மில்லை, முடியவில்லை. கூடத்திலேயே நேர்ந்து விட்டது. அண்டையில் கூப்பிட அவகாசமில்லை, யாருமில்லை. கிருஷ்ணாவைத் தவிர. பிரசவம் கிருஷ்ணாவின் ஒத்தாசையோடு தான். அவமானத்தின் மேல் அவமானம். உஷை அழுதுவிட்டாள்.
    
   குழந்தை பெரிதாய், சிவப்பாயிருந்தது. அப்பவே தலைமயிர் காடு. மார்பில் பெரியதாய் மச்சம். அழுகை ராக்ஷஸம்.
   நாளடைவில், பார்வை நிலைத்து, குறிப்பாகி அவள் மேல் பதிந்ததும், அதில் ஏதோ குற்றச்சாட்டு அவளுக்குத் தோன்றிற்று. என்னை ஏன் பிறப்பித்தாய்? அப்படித் தோன்ற, தன் மனசுதான் காரணம் என்று தெரிந்தாலும், உஷை அச்சுற்றாள். அதன் நோக்கு, அவள் முதுகின் பின்னாலும் தொடர்வது போல் பிரமை தட்டிற்று.
  சுருக்கவே தாய்ப்பாலை நிறுத்தி விட்டாள். முதலில் அன்பு சுரந்தால்தானே, பால் சுரக்கும்! இருப்பதை உண்கையிலும், அவள் உயிரையே உறிஞ்சுவது போன்ற அதன் மூர்க்கத்தில் உஷை இளைக்க ஆரம்பித்து விட்டாள்.
  அவளுக்கு அதன்மேல் பாசம் பொங்கி வழியவில்லை. அதெல்லாம் புத்தகத்தில் படிக்கும், சினிமாவில் கேட்கும் டயலாக். அதுமாதிரி பாசம் கிடையாது. பாசம், காதல், தியாகம் இவை நிரந்தரப் பொய்கள். நம்மையே நாம்