பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டப்படாதவர்கள் ❖ 143


 ஐட்டமாயிருக்கிற இந்த நாளில், அவாளே எப்படிம்மா குடித்தனம் நடத்துவா?"

"பெண் பாடுவாளா? இல்லையா? அவனுக்குப் பாட்டுன்னா உசிராச்சே! அவனே நன்னாப் பாடுவான். காலை மாலை விளக்கேத்தி ஒரு ஸ்தோத்திரத்துக்குக் கூட வழியில்லையா? நாங்கள் ஆச்சார்ய ஸ்வாமிகள் தரிசனத்துக்குப் போனால், அவர் எங்களைப் பேரைச் சொல்லி அழைக்கும் அளவுக்கு எங்களுக்குப் பழக்கமாச்சே!

பிறகு, வந்தவன் ஒருவன் அவளைக் கண்ணாலேயே துகிலுரிச்சபோது, கிருஷ்ணா கோபம், வெறுப்பு, பயமாகி விட்டாள். இவன் பாக்கறதைப் பார்த்தால், இவனுக்குப் போது, சமயம், இடம்னு இருக்காது போல இருக்கே! மிருகம், சீ! ஆம்பளைகளே இப்பிடித்தானா?

இன்னும் இரண்டொரு கேஸ்களில், அவளே பரிகசிக்கும்படி ஆகிவிட்டது.

"எங்கிருந்தப்பா இதுகளைப் புடிச்சேள்? நான் நெட்டை தான், ஒப்புக்கறேன். அதுக்காக என் ஆம்படையானை இடுப்பில் தூக்கி வெச்சுண்டு நடமாட முடியுமா?"

இத்தனைக்கும் கிருஷ்ணாவுக்குத் தோஷ ஜாதகமில்லை. ஆனால், நாட்கள் கடந்து சென்றன.

கிருஷ்ணானந்த் பூஜை பண்ணிக் கொண்டிருந்தார்.

உஷை வீட்டில் சாமான்களை, ஃபர்னிச்சரை இடம் மாற்றி மாற்றி அமைத்து அலமாரியில் பொருள்களை விதவிதமாய் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணா, பாத்திரங்களைப் பற்றுப் போக நன்றாய்ச் சுரண்டிப் பளபளக்கத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

எவரையும் பொறுப்பு இல்லை என்று சொல்ல முடியாது.