பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 ❖ லா. ச. ராமாமிர்தம்


 ‘தை‘கள் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன.

ஆனால் வழி பிறக்கவில்லை.

எல்லாருக்கும் வயது ஏறிக் கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், தாப பூமியில் கோடை ‘மின்’ வெள்ளம் (Flash flood) பாய்ந்தாற் போல் குழந்தை வந்து முளைத்ததும், கிருஷ்ணா அப்படியே வாரிக் கொண்டாள். அவளுடைய படுகையே புரண்டது.

தாய் ஆனால்தான் தாய்மை என்று இல்லை. பெண்ணென்றாலே தாய்மைதான் என்று கிருஷ்ணாவிடம் தெரிந்தது. அந்தப் பச்சைப் புழுவின் அசிங்கங்களை அலம்புவது அவளுக்கு அசிங்கமாகப் படவில்லை. கிருஷ்ணாவிடம் அசிங்கமேயில்லை. பார்ப்பவருக்கு சற்று ஆச்சரியமாகக் கூட இருக்கலாம்.

குழந்தையை ஆற அமரக் குளிப்பாட்டி, பளிச்சென்று துவட்டித் துடைத்து, தலைக்குக் கமகமென அகிற் புகையிட்டு, உடுத்த-வேண்டாம், கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொள்கையில், கை கொள்ளாமல் சதை வழியும் அந்த உடம்பு தன் மேல் மெத்தென்று அமிழ்ந்துகையில், அந்த சுகத்தில் நெஞ்சு அடைத்தது. கண்கள் சொக்கின. அதுவும் அவளைத்தான் நாடிற்று. அவளிடம் தனி கொக்கரிப்பு, கை கால் உதைப்பு, “Ga ga Goo goo"- அவளும் குழந்தையாகி விட்டாள்.

குழந்தைக் காரியங்களிலிருந்து உஷை சீக்கிரமே விடுதலையானாள். குழந்தை தாயை அடையாளம் கண்டு கொண்டது.தாய் தேவையில்லை. அதற்குத்தான் பெரிய, தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கும், தானும் சேர்ந்து ஆடும், அலுக்காத பெரிய விளையாட்டுப் பொம்மை கிடைச்சுப் போச்சே!