பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டப்படாதவர்கள் ❖ 145



"தெல்லத் தண்ணாட்டி"

"தண்ணாட்டி இல்லேடா, கண்ணாட்டி"

"தண்ணாட்டி."

கிருஷ்ணா கைகொட்டிச் சிரித்தாள். அவள் சிரிப்பில் பூக் கொட்டிற்று. நக்ஷத்ரங்கள் உதிர்ந்தன. உள்ளே புண் ஆற்றும் தைலம் பொழிந்தது.

நாளடைவில், காடுமில்லை, தோப்புமில்லை எனக் கொல்லைப்புறத்தில் படர்ந்திருக்கும் தாவரத்தின் அடர்த்தியில், அவர்களுக்கு அத்துப்படியில்லாத பொந்து, வளை, கூடு, வேரின் கோணங்கித்தனம், அடிமரத்தின் முடிச்சோ கிடையாது. போதில் பெரும்பால் அவர்களுக்கு அங்குதான் கழிந்தது. அவன் படும் ஆச்சரியங்களில் அவளும் புதிது புதிதாய் விஷயங்கள் கண்டாள்.

சிட்டுகள் பூமியில் தத்தித் தத்தி, புதருக்குப் புதர் பறந்து வம்புகள் நடத்தின. கிளைகளில் மாறி மாறி உட்கார்ந்து, பக்ஷிஜாதிகள் அரட்டையடித்தன. சருகுகள் சில இடங்களில் மிதிக்குக் கணுக்காலாழத்துக்குப் புதைந்து, செல்லமாய்ச் சலசலத்தன.

சமயங்களில் மத்யான மோருஞ்சாதத்தை இங்கே கொண்டு வந்து சாப்பிடுவதுமுண்டு. ஒரே டிபன் டப்பாவிலிருந்து தாங்களும் சாப்பிட்டுக் கொண்டு குருவி, காக்கா, அணிலைக் கூப்பிட்டு அதுகளுக்கும் போட்டுண்டு, அது ஜாலிதான். "கோபி, இதன் பேர்தாண்டா பிக்னிக்!' அவனுக்கு என்ன புரியும்? ஆனால், இது ஒரு சந்தோஷம்னு அவனுடைய சிரிப்பும் விரிந்த கண்களும் சொல்லின.

"கோபி உனக்குப் பல் சத்தே பெரிசுதான். ஆனால் வரிசை. எனக்கும் இருக்கே, அதிலே தித்திப்பல் ஒண்ணு வேறே!"