பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 ❖ லா.ச. ராமாமிர்தம்



அவள் பல்லை இளித்துக் காட்டியதும், விழுந்து விழுந்து சிரித்தானே பார்க்கணும். அப்பிடிச் சிரிக்க என்ன இருக்கு? சிரிப்பாகவே ஆகிவிட்டான். He become laughter itself. ஓ, அந்த அளவுக்கு அவளிடம் இங்கிலீஷ் இருந்தது, அல்ல வந்தது.

அப்புறம் இன்னொரு விளையாட்டு, "நீ என்னைக் கண்கொட்டாமல் பாப்பியாம். நானும் உன்னைப் பாப்பேன். யார் முன்னாலே கண் சிமிட்டிட்டாளோ, அவா தோத்துட் டான்னு அர்த்தம். சரி, ஜூட்!"

ஆனால், அவனால் கண்ணைக் கொட்டாமல் அவளை விட அதிக நேரம் இருக்க முடிந்தது. ஒரு நேரத்துக்குப் பிறகு, அருண்டு போய்விட்டாள். “கண்ணைக் கொட்டுடா!" தவித்தாள். அவன் கன்னங்களைப் பிடித்து உலுக்கினாள். கண்களைச் சாவகாசமாக மூடித் திறந்து, சத்தமில்லா அவள் சிரிப்பைக் கண்டபின்தான் மூச்சு வந்தது.

ஒரு சமயம் அந்த விளையாட்டு இல்லாமலே, அவனைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். இருந்தாற் போலிருந்து விழியோரங்களினின்று ஸ்படிகம் புறப்பட்டுக் கன்னங்களில் வழிந்தது. புரியாத துக்கத்தில், அவனுக்குக் கீழுதடு பிதுங்கிற்று. மௌனமாய் விரல்களில் அவள் கண்ணீரைத் துடைக்க முயன்றான்.

"கோபி, உன் பேர் கிருஷ்ணா, என் பேர் கோபியா இருந்திருக்கணும்.

புரிந்தமாதிரி தலையை ஆட்டினான். அக்கா அழாமல் இருந்தால் சரி.

'பாவம், உனக்கென்ன புரியப் போறது!" கண்ணீரிலும் சோகமான புன்னகையில் அவள் உதடுகள் லேசாய் வளைந்தன.