பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டப்படாதவர்கள் ❖ 147



"ஆனால் ஒரு நாள் நாம் பிரிஞ்சு போயிடுவோம். பிரிஞ்சுதான் ஆகணும். ஆனால் இப்போ, கோபி நான் மதுராவுக்குப் போயிடுவேன். கிருஷ்ணா, நீ பிருந்தாவனத்தில் தங்கி விடுவாய். அன்னிக்கு மதுராவுக்குப் போன கிருஷ்ணன் திரும்பல்லே. இன்னிக்கு கோபி என் மதுரையிலிருந்து நானும் திரும்ப மாட்டேன். அப்பிடியே என்னிக்கானும் நான் திரும்பினாலும் நமக்குப் பிருந்தாவனம் இருக்காது. பிருந்தாவனம் போனது போனதுதான்."

விக்கி விக்கி மாரே வெடித்துவிடும் போல் அழுதாள்.

மௌனமாய் அவள் தோள் மேல் கைவைத்து. உடனேயே அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

கிருஷ்ணா கண்ணைத் துடைத்துக் கொண்டாள். சிரித்தாள். "கோபி, நாம் ரெண்டு பேரும் வேண்டப்படாதவர்கள், தெரியுமா? அதனால்தான் உனக்கு நான், எனக்கு நீ.பாத்தியா, அழுகை போச்சு, சிரிப்பு வந்தது டும் டும்."

இருவர் சிரிப்பும் கலந்தது.

அவர்கள் உலகம் அப்பாவி உலகம். அங்கே அசம்பாவிதத்துக்கே இடம் கிடையாது. அபத்தம்கூட அற்புதமாகி விடும்.

ஒரு சமயம்,காலையின் பொன் வெயிலில் தகதகத்துக் கொண்டு அவர்களை வட்டமிட்ட ஒரு தட்டாரப் பூச்சியைப் பிடித்து அதன் இறக்கையைப் பிய்த்தான். அதிர்ந்து போய் அவன் கையினின்று பிடுங்கினான். அது துவண்டு அவன் கையினின்று விழுந்ததும், தன்னை அறியாது அவனை அறைந்தாள். குழம்பிப் போய் அவன் நின்ற பரிதாபம் தாங்க முடியவில்லை. அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள், அவனுக்குப் புரியவில்லை.

பிறகு ஒரு நாள்...