பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 ❖ லா. ச. ராமாமிர்தம்




காலையிலிருந்தே வானம் மூட்டம். லேசாய்ச் 'சில்'கூட மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்; இல்லை, பேசிக் கொண்டிருந்தாள். வழக்கம் போல் ஒருதலை சம்பாஷணை. புரிந்ததோயில்லையோ, கண் கொட்டாமல், மெளனமாய், அவளையே பார்த்துக் கொண்டு, அவன் முழுக் கவனமே அவளுக்கு வடிகால்.

இருந்தாற் போலிருந்து ஓசைகள் அடங்கி விட்டாற் போல் உணர்வு. ஏன்? யாரேனும் வராளா? சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருமில்லை. ஆனால், அவர்கள் தனியா யில்லை. மரத்தின் பின்னால் புதரின் பின்னால் ஒளிஞ்சுண்டு யாரேனும், ஏதேனும்-? ஆனால் பயமாயில்லை. ஒரு 'த்ரில்'. இடமே ஏதோ வகையில் சிலிர்த்திருந்தது. காலடியில் சருகுகள், மரத்தில் இலைகளின் சலசலப்பில் ஏதோ எதிர்பார்ப்பு. யாரை? யாருடைய வருகையைத் தெரிவிக்க முயன்றன?

யாரது? என் மணாளனா? ஏற்கனவே, எங்கேயோ எனக்காகப் பிறந்து, ஆனால் இன்னும் நான் காணாமல், ஆனால் இங்கே இப்போ திடீர்னு பிரசன்னமாகி என் கை பிடித்து, நான் வீட்டுக்குப் போய்ச் சொல்லிக் கொள்ளக் கூட அனுமதிக்காமல், இப்படியே என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்லப் போறாரா? மார்க்கூடுள் தங்கக் குருவி தவித்தது. அழுத்திப் பிடித்துக் கொண்டாள். விவரிக்கவொணா ஒரு ஸன்னிதான பயம்,பரபரப்பு.

திடீரென மேகங்களைக் கிழித்துக் கொண்டு சூரியன் புறப்பட்டான். நேரமே அந்த வெளிச்சத்தில் குனிந்து, வான், பூமி, செடி, கொடி, புதர்கள் எல்லாவற்றுக்குமே முகம் துடைத்த 'பளிச்'சில் ஏதோ திருவிழாவுக்குத் தயாராகி விட்டாற்போல். பார்வைக்குப்பட்ட எல்லாமே ஒரு புதுப் 'பெரிசி'ல், 'பளிச்'சில் தெரிந்தன.