பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 ❖ லா.ச. ராமாமிர்தம்


 டார்ச்சுடன் காடு முழுவதும் சுத்திச் சுத்தி வந்ததுதான் மிச்சம். போலீசில் எழுதி வைக்கணுமா? நினைப்பே பகீரென்றது.

"நாளைக்குப் பார்க்கலாம். பரமாத்மா கைவிட மாட்டான். அவனே குழந்தையாயிருந்தவனாச்சே!"

பூஜையறையில் கிருஷ்ண விக்ரஹத்தைக் கணவனும் மனைவியும் சேர்ந்து நமஸ்கரிக்கையில், அடக்கிக் கொண்ட அழுகையில், மோவாய் நடுங்கிற்று. காணாமல் போன குழந்தை மேல், இதுவரை மறைந்திருந்து, புதிதாய்க் கண்ட கனிவில் நெஞ்சு நெகிழ்ந்தது. ஏதேதோ பச்சாத்தாபங்கள் நெஞ்சை அமுக்கின.

தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டாள். ஜன்னலுக்கு வெளியே குன்றின் முக்கு தெரிகிறது. முதன் முறையாக கண்ணுக்கு அது கோவர்த்தன கிரியாகப் படுகிறது. எந்த மொத்தாகாரத்துக்கும் ஒரு உக்கிரம் உண்டு. இன்று அது அவளைத் தாக்கிற்று.

எல்லை கிடந்த கிழத்தில், இடையிடையே சதை மாதிரி மடிப்புவிட்டுக் கொண்டு, படுத்துவிட்டு எழுந்து நிற்க முடியாத பிரம்மாண்டமான மிருகம் போல், இந்த இடத்தைக் காலம் காலமாய்க் காத்து வருகிறாய். என் குழந்தை எங்கே? உனக்குத்தான் தெரியும். நீதான் காப்பாத்தணும்.

இன்று அதன் உச்சியில் கிரீடம் வேய்ந்தாற் போல் நக்ஷத்ரங்கள் குடலை கவிழ்ந்திருக்கின்றன.

கொல்லைக் கதவைத் தட்டறாளா? ஆமா. சத்தம் திடமாகவே கேட்கறதே! படிகளை ஓடியிறங்கிப் போய்த் திறந்தாள். பிரார்த்தனை பேசி விட்டது. நெஞ்சிலிருந்து தேம்பல் கேவிற்று. அப்படியே வாரி அணைத்துக் கொண்டு கூடத்துக்கு வந்து விளக்கைப் போட்டாள்.