பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டப்படாதவர்கள் ❖ 151

 குழந்தை முகம், உடம்பு அங்குமிங்கும் சிராய்ப்புகளும் சதை கிழிந்து, ஒரே ரத்த விளாறு.

"பாவி, என்ன ஆச்சு?" வயிறு ஒட்டிக் கொண்டது.

"அக்கா அங்கே இருக்கா." குன்றின் உச்சியைச் சுட்டிக் காட்டினான். அவன் கண்கள் ஒளி வீசின.

"என்னடா உளர்றே?"

"நிஜம்மா நான் மேலே ஏறிப் பாத்தேனே. அங்கே நின்னுண்டிருக்கா. என்னைப் பாத்ததும் "போ போ, இங்கே வரக்கூடாதுன்னு என்னைக் கீழே போக இறக்கி விட்டுட்டுப் போயிட்டா, அக்காவை நீ அங்கே ஒளிச்சு வெச்சிருக்கே."

மறுநாள் தபாலில் கடிதம் வந்ததும், நாலு மூலையிலும் கறுப்பு மசி தடவி, பிரிக்கையில் கைகள் நடுங்கினாலும், படித்ததும் விழிகளில் அனல் அருவி புறப்பட்டாலும் அவளுக்கு அப்படியொன்றும் அதிர்ச்சியாயில்லை. முதல் நாளே கோபிதான் சேதி சொல்லிட்டானே!

"பாவிகள்! தந்தி, கேபிள், டெலிபோன் ஏதும் அவாளுக்குத் தோணல்லியா?"

"தோணியிருந்தால் நீ போயிருப்பியா?" என்று புத்தி திருப்பிக் கேட்டதும் அவளிடம் பதில் இல்லை.