பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரசம்ஹாரம் * 155

எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான். ஒரு கையில் எண்ணெய்ச் சட்டியை ஏந்திக் கொண்டு, இன்னொரு கையில் கந்தையை வைத்துக் கொண்டு, எண்ணெயைப் பந்தங்களின் மேல் பிழிந்தான். அவனைக் கண்டதும் சக்திவேலின் மூக்கு, வெறுப்பால் சற்று சுருங்கியது.

மைசூர் நல்ல தேகவளம் படைத்திருந்தான். தீவட்டி ஜ்வாலை அவனைச் சுற்றி ஆடும்பொழுது, அவன் மார்பிலும், புஜங்களிலும், முதுகிலும் கரணை கரணை யாய் நரம்புகள் விம்மிப் புட்ைத்தெழுந்து, அவன் தேக வன்மையை எடுத்துக் காட்டின. வியர்வையும் எண்ணெ யும் ஒழுகும் அவன் கருந்தேகம், தீவட்டி வெளிச்சத்தில் கருங்காலி போல் மின்னியது. சுருட்டை சுருட்டையாய்த் தலைமயிர், நெற்றி முன் வந்து விழுந்தது. அவனைச் சுற்றிக் கள் நாற்றம் வீசியது.

அவனைப் பற்றிய கதைகள் அனேகம். கலாட்டா, சண்டை நடக்கும் இடங்களில் அவனை முன்னால் காணலாம். சிலம்பமாடுவான். தீவட்டிக் கொட்டடி யடிப்பான். அவன் பெயரைக் கேட்டாலே, ஊரிலிருக்கும் பெண்களும் குழந்தைகளும் நடுங்குவார்கள். இப்பொழுது கூட, பந்தத்தைச் சரியாய்த் திருப்பிக் காட்டவில்லையென்று தீவட்டி பிடிப்பவர்களை அவன் கர்ஜிக்கும் வசை காது கொண்டு கேட்கக் கூடியதல்ல.

மைசூரைப் பார்த்தாலே ராக்ஷஸன் மாதிரியிருந்தது.

தெய்வயானை, தெருத் திண்ணைத் தூணைக் கட்டிக் கொண்டு, அவள் வீட்டு வாசலில் நின்றாள். கருவண்டை யொத்த அவள் கண்களும், குழந்தை வாயும், ஆச்சரியத்தால் மலர்ந்திருந்தன. அவள் கண்கள், முகத்திற்கு முகம் பதிந்து, பெயர்ந்து சென்றன. -