பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 & லா. ச. ராமாமிர்தம்

பூவோ காயோ எதையேனும் உருவாக்கிக் கொண் டிருப்பாள். கை சும்மாயிருக்காது. வீட்டில் கொல்லைப்புறம் பெரிசு. ஏன் வீடு முழுக்கவே கொல்லைப்புறம்தான்.

சாயங்காலம் தன் பிரஜைகளைப் பாலிப்பது போல் ஒவ்வொரு செடிக்கும் எதிரே சற்று நேரம் தயங்கி நின்று தாண்டிப் போவாள். அவளைக் கண்டு செடிகள் படபட வென்று அடித்துக் கொள்ளும். அப்பொழுதென்று மாலைக் காற்று கிளம்புமா? இல்லை, அம்மாவுக்கும் செடிகளுக்கு மிடையே ஏதோ பாஷையிருந்தது. தொற்றிக் கொள்ளத் தெரியாமல் தத்தளிக்கும் அவரைக் கொடியைப் பந்தலில் இடம் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போவாள்.

அம்மா, செக்கச் செவேலென்று

சற்றுப் பூசினாற் போல்

சற்றுத் தழைந்திருப்பாள்

காமதேனு.


ஊர் தாண்டி, வாய்க்கால் தாண்டி, பிரும்மாண்டமான

மைதானத்தின் மேடு தாழ்வுகளின் வளைவுகள் தாண்டின தும், கண்ணுக்குக் குளுமையாக ஒரே வயல்பச்சைதான். இடையிடையே ஏற்றக் கிணறுகள், வயற்பச்சையுடன் வானிலம் இழைவதே அலுக்காத ப்ரமிப்பு. கதிர்களைக் காலைக் காற்றும், மதியக் காற்றும், மாலைக் காற்றும், ஊடுருவுகையில் பூமி பெருமூச்செறிவது மயிர்க் கூச்செறி யும். ஒன்றும் புரியாது. ஆனால் புரியாமலும் இருக்காது. நான் சின்னப் பையன் தானே! ஏதோ பிரம்மாண்டமான அர்த்தம் என்னை அழுத்துகையில், ஏதோ பெரிய துக்கமும் அதனுாடே. ஏதோ சிரிப்பின் கிண்கிணியும் தொண்டையை அடைக்கிறது.