பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ❖ லா. ச. ராமாமிர்தம்

கடுகு கூட ஈரம் இல்லே. மண்ணில் கசிவேயில்லே. புத்து
மண்ணாட்டம் பிசுபிசுன்னு உதிருது. இங்கிருந்து பார்த்தா
கிணறு ஒரு பெரிய கல் ஜாடியாட்டமில்லே! அந்த
உவமைக்கு அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கிணற்றின்
பக்கவாட்டை அன்போடு தடவினான். விரலில் ‘சுருக்’-

இது ஒண்ணுதான் பாக்கி. விரலை வாயுள் வைத்துச்
சப்பினான். உப்புக் கரித்தது. ரத்தமே புறப்பட்டுடுச்சா?
ஆனால் மயக்கம் இல்லை. அப்போது நல்லா விடிஞ்சுட்டுது.
ஆள் நடமாட்ட பேச்சு சத்தம் நல்லா கேக்குது.

தன்னைக் குத்தின இடத்தில் விரலைவிட்டுப் பெரி
சாக்கிச் சற்று ஆழமாவே தோண்டினான். என்னவோ
பளபளன்னு, கைக்குக் கணிசமா, பிடிப்புக்குக் கெட்டியாட-
அதான என்னடா சீறல்லையேன்னு பார்த்தேன்! வெடுக்
குன்னு வேகமாகவே பிடுங்கினான். அங்கிருந்து ‘சர்ர்’னு
பீச்சியடித்தது மூஞ்சியில், வாயில் கல்கண்டா இனிக்குது.
கண்ணில் பாஞ்சதுமே குளுமை-அம்மாடி! இதனால்தான்
இதுக்கு இத்தினி நாள் காத்திருந்தேனா?

கையில் இருப்பதையே கண்ணின் புதுப் பளிச்சுடன்
அப்பத்தான் பார்க்க முடிஞ்சுது.

சிலை. அம்மன் சிலை. கைப்பிடியில், மேல் பிடியில்
இடுப்புவரை, பிடியின் கீழ், பீடமும் தெரிந்தது. வலது கால்
கட்டை விரலை, ஊசிமுனை மேல் அழுந்தப் பதித்த
வண்ணம் ஆத்தா தவத்திலிருக்கா. அந்த இளஞ்சிரிப்பு-
அம்மாடி-கண் கூசுது. இதுக்குள் வெள்ளம் பிதுபிதுன்னு
பொங்கிடுச்சு. நுரை கக்கிக்கிட்டு ஒரு பக்கமா வெளியே
வளிஞ்சு ஒடுது. கிழவனையும் ஏந்திக்கிட்டு மேலே கொண்டு
வருவது போல் வந்து மறுபடியும் கீழே இழுத்துக்கிட்டுப் போயிட்டுது.