பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ❖ லா. ச. ராமாமிர்தம்

எல்லாருமே நல்லவங்க. மாமியாரு தங்கமானவங்க. அவங்க
தான் என்னை அனுப்பிவச்சவங்க. “என்ன இருந்தாலும்
பெத்தவரு. உன்னைப் பாக்கணும்னு இருக்காதா? நீ போய்
வா”ன்னாங்க. மூணு வயசுலே ஒரு பையன் இருக்கான்.
வீட்டுலேயே விட்டுட்டு வந்திருக்கேன். இந்தக் களேபரத்தில்
அவன் ஏன்?-என்ன செய்யது மூச்சு முரண்டுதா? இதோ
பாருங்க, என் தோளுலே சாஞ்சுக்கங்க. வெக்கப்படாதீங்க-
அப்பிடித்தான்...இப்ப தேவலியா?”

“பெண்ணே உன் பேரென்ன?-இல்லை வேண்டாம்
இப்படியே இருந்துட்டுப் போகட்டும். இப்போ இந்த
நிமிஷத்துலே ஒரு உண்மை தெரிஞ்சது. உலகத்தில்
எல்லாருமே நல்லவங்கதான். இந்த சமயத்துக்கு நீதான்
பெண்-இல்லை, பேத்தி. யாராவானாலும் சரி. சமயம்
தான் கணக்கு. ஆள், பேர் இல்லை. கமலி-திடீர்னு என்ன
இப்படி இருட்டிப் போச்சு-கமலி எங்கேடி இருக்கே?”
திணறினார்.

“பயப்படாதீங்க. இதோ என் கையைக் கெட்டியாய்ப்
பிடிச்சுக்கங்க-முருகா! முருகா!!”அவளுக்கு முகம் எரிந்தது.
ரவிக்கை திடீரென்று நனைவதை உணர்ந்தாள். பயங்கர
மான தாய்மையில் பரிதவித்தாள்.

அவர் கண்கள் முழுக்க விழிக்க மிகவும் முயன்றன.
பார்வை, அரைக் கண்ணில் அவள் மேல் தோய்ந்து
அலர்ந்தது. அவள் கையுள் அவர் பிடி தளர்ந்து துவண்டது.

திடீரெனக் காற்று கிளம்பி, இலைகள் சலசலத்துத்
தரையிலிருந்து குப்பைகள் எழுந்து சுழன்று பறந்தன.
அழுந்த வாரிய அவர் கேசத்தில் தடியாக இரண்டு பிரிகள்
பிரிந்து நெற்றி மேடில் விளையாடின. புன்னகையில்
உதட்டோரக் குழிகள் இளகின.