பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. நிர்வாக நிர்மலா

அப்போது மணி ஆறு! சாவி கொடுக்கப்பட்ட கடியாரம் சினப்பாளோ என்று நினைக்காமல், சேவலைப் போல் குரல் கொடுத்துத் தன் கடமையைச் செய்துவிட்டு அமைதியாக டிக் டிக் என்ற ஒலியுடன் ஒடிக்கொண்டிருந்தது. அதற்குள் விடிந்துவிட்டதா என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டு. “இன்று நான் எந்தச் சூழ்நிலையிலும் கோபப்பட மாட்டேன்; எவரையும் புண்படுத்த மாட்டேன்; எக்காரணம் கொண்டும் யாரிடமும் சீறி விழ மாட்டேன்” என்ற பிரார்த்தனையோடு எழுந்தாள். ஆம் நிர்வாகத்தில் பெரும் பொறுப்பு வகிக்கும் அவளைப் போன்றவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய உறுதிமொழி தான் அது.

‘உண்மை கெமிக்கல் கம்பெனி'யின் நிர்வாக மேலாளராகப் பொறுப்பேற்ற நிர்மலா ஒரு கெமிஸ்ட்ரி” பட்டதாரி. ஆராய்ச்சியாளரும் கூட, இளம் வயதிலேயே டி.எஸ்.சி. பட்டம் பெற்றவள். அவளுடைய அழகையும் அறிவையும் ஆற்றலையும் எண்ணித்தான் உரிமையாளர் உலகநாதன் அப்பதவியினை அவளுக்கு அளித்தார். ஐ.ஏ.எஸ். ஐ பி எஸ். போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர் என்பதை அறிந்து உரிமையாளரே தேடிச் சென்று நிர்மலாவைக் கண்டு அப்பதவியைத் தந்தார். இந்த முடிவினால் வரும் உட்பகையை, நிர்மலாவே எதிர்த்துப் போராடி வெல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் அவர். நிர்மலா ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தாள்.