பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அவமானமா? அஞ்சாதே!



நம் இந்த அவமானத்திற்குள்ளே இருக்கும் நுட்பத்தை, திட்பத்தை இன்று கொஞ்சம் உட்புகுந்து பார்ப்போமே!

பாம்பு என்றதும் பயந்தோடி விடாமல், பாம்பைப் பிடித்து, பல் எத்தனை என்று பார்க்கிற நிலைதான் இது.

அவமானம் என்ற ஒரு சொல்தான் நம்மை அச்சப்படுத்துகிறது. நமது வீரத்தை கொச்சைப்படுத்துகிறது என்றால், அந்தச் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். தோலுரித்த வாழைப்பழம் போல, நமக்கு இனிக்கும், மணக்கும், சுவைக்கும்.

அவ + மானம் என்ற இரண்டெழுத்தின் கூட்டுத்தான் அவமானம் என்று ஆயிருக்கிறது.

அவ என்ற சொல்லுக்கு அறிவு, ஆதாரம், கட்டளை, திருத்தம், சுத்தம், நித்தை என்றெல்லாம் அர்த்தம் உண்டு.

மானம் என்ற சொல்லுக்கு பெருமை, மரியாதை, வலிமை, பெருந்தன்மை, அகங்காரம் என்றெல்லாம் அர்த்தம் இருக்கிறது.

இப்போது அவமானம் என்ற வார்த்தையை, கூட்டிக் கழித்து, ஒர் அர்த்தம் செய்து பார்க்கலாமா! மனமிருந்தால் இடம் மட்டுமல்ல, வழியும் உண்டு. வாழ்க்கையும் உண்டு.

ஆக, அறிவுப் பூர்வமான ஆதாரமாக அமைந்த, ஆண்மை பிறப்பிக்கக்கூடிய, எதையும் திருத்தி, இனிதாக அமைக்கிற சுத்தப்படுத்துகிற சுகமான சுந்தர செயல்களைச் சொல்லிக் காட்டுவதுதான் 'அவ’ ஆகும்.

அது எதற்காக இப்படிச் செய்கிறது?

ஒருவரின் மானமாக விளங்குகிற பெருமையை, வாழ்வாக இருக்கிற மரியாதையை, உடலுக்குள் இருக்கிற வலிமையை, மனத்துக்குள் இருக்கிற பெருந்தன்மையை, மேலும் மேலும் உயர்த்திக் காட்டத்தான். இந்த அவமானம் என்ற சொல் அமைந்திருக்கிறது.