பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. அவமானங்கள் பலவிதம்


வமானங்கள்தாம் தன்மானத்தைத் தட்டி எழுப்பும் சக்தியைப் பெற்றிருக்கினறன என்று கூறுவதைக் கூட பலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவமானம் செய்தவர்களை சும்மா விட்டுவிடலாமா? திட்டித் தீர்த்துவிட வேண்டும் என்று கொட்டி முழக்குவோர் பலர் வெட்டிச் சாய்த்துவிட வேண்டும் என்று வீராவேசம் பேசுவோர்கள் பலர்.

இப்படி கோபம் கொள்வதையெல்லாம், தன்மானத்தைத் தட்டி எழுப்புகின்ற தன்மையாக நான் சொல்ல வரவில்லை. அவமானத்தின் அடித்தளத்தைப் பற்றி நாம் அமைதியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கிறேன்.

அவமானம் செய்தவர் யார்? அவரது அடிப்படை நோக்கம் என்ன? நம்மை அவமானப்படுத்திவிடுவதால் அவருக்கு ஏற்படும் லாபம் என்ன? என்று கொஞ்சம் சீற்றமடையாமல் சிந்தித்துப் பார்த்தால், நமக்கு கோபம் வராது. மாறாக லாபம்தான் வரும்.

அவமானப்படுகிறபோது ஆத்திரம் கொள்ளாமல், அமைதியாக சிந்திக்க முடியுமா? பொறுத்துப் போக முடியுமா? வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்கும் வேளையில், ஏற்பட்ட அவமானத்தின் வரலாற்றை ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா? இப்படிக்கூற உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?

புரிகிறது புரிகிறது. உங்கள் கோபம் தெரிகிறது. அவமானம் ஏற்படுகிற சமயத்தில் வெகுண்டடெழுந்து விட்டால், அவமானப்படுத்தியவர்க்கு ஏற்படுகின்ற சந்தோஷத்திற்கு அளவேயிருக்காது. அவர்களுக்கு ஏன் இரட்டிப்பு மகிழ்ச்சியை நாம் அளிக்க வேண்டும்?